தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் முத்தரசன் பேட்டி


தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 28 Jun 2019 10:15 PM GMT (Updated: 28 Jun 2019 6:50 PM GMT)

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இது கடந்த 2013-ம் ஆண்டு ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டம். தற்போது தான் அதற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. 2021-ம் ஆண்டு தான் இந்த திட்ட பணிகள் முடிவடையும். இதனால் தற்போது உள்ள குடிநீர் பிரச்சினைக்கு இந்த திட்டம் உதவாது.

7 பேர் விடுதலையில் அமைச்சர்கள் ஒப்புதல் வழங்கி விட்டனர் என அப்படியே இருக்காமல் உள்துறை மந்திரி அமித்ஷாவை வலியுறுத்தி விடுதலைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தொடங்கியுள்ள தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழகத்தில் தற்போது நிலவும் குடிநீர் பிரச்சினை, 7 பேர் விடுதலை தொடர்பான பிரச்சினை, நீட் தேர்வு தொடர்பான பிரச்சினை ஆகியவற்றிற்கு தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விளக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி ஜூலை 2-ந் தேதி தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டும், கர்நாடக அரசு இதை செயல்படுத்த மறுக்கிறது. கர்நாடகா தமிழகத்தை வடிகாலாகத்தான் பயன்படுத்துகிறது. காவிரி மேலாண்மை வாரியத்திற்கு அதிகாரம் உள்ளதா? என்பதே தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

இந்தாண்டு குறுவை சாகுபடி பொய்த்துவிட்டதால், குறுவை சாகுபடி செய்யும் டெல்டா விவசாயிகளை கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு உரிய நிவாரணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும். தி.மு.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தமிழகத்தில் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விட்டால் குற்றங்களை தடுக்க முடியும்.

மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் தேவையற்றது. தற்போது உள்ள தேர்தல் நடைமுறைகளை மாற்ற வேண்டும். விகிதாச்சார முறையில் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, விகிதாச்சார முறையில் எந்தெந்த கட்சி எவ்வளவு வாக்கு சதவீதம் வாங்கி உள்ளது என்பதை பார்த்து அரசுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். உண்மையான ஜனநாயகம் மலர வேண்டும் என்றால் இத்தகைய முறையைத்தான் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story