குடிநீர் கேட்டு கிராம மக்கள் போராட்டம் - உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு
உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மனங்கூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும், விளை நிலங்களுக்கும் சென்று தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வந்தனர். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் குடிநீர் கேட்டு கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருநாவலூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள், தங்கள் பகுதியில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறினர். அதற்கு அதிகாரிகள், குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story