குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 28 Jun 2019 9:45 PM GMT (Updated: 28 Jun 2019 7:12 PM GMT)

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம்,

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சேங்கல் ஊராட்சி மேலப்பண்ணைகளத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணற்று நீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டில் நிரப்பி அதிலிருந்து குழாய்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக ஆழ்துளையில் நீர் மட்டம் குறைந்து போனதால் போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம், மாவட்ட கலெக்டர் என மனு கொடுத்தனர்.

இதனையடுத்து புதிய ஆழ்துளை கிணறு அமைக்க இடத்தை தேர்வு செய்த அதிகாரிகள் இதுவரை புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தரவில்லை. மேலும் சிறிதளவு நீர் கொடுத்து வந்த பழைய ஆழ்துளை கிணற்று மின் மோட்டாரையும் ஊராட்சி நிர்வாகம் கழற்றி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியிலுள்ள தோட்டங்களில் உள்ள கிணறு , பக் கத்து ஊர்கள் என தண்ணீருக்காக அலைய வேண்டிய சூழ்நிலையில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் .இதனால் ஆத்திர மடைந்த அந்தபகுதி மக்கள் நேற்று காலை சேங்கல் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கரூர்- சேங்கல் சாலையில் அமர்ந்து காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பொதுமக்களின் கோரிக்கையின்படி புதிய ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கழற்றி எடுத்து செல்லப்பட்ட மின் மோட்டார்களுக்கு பதிலாக புதியதாக மின்மோட்டார்களை இன்று (நேற்று) மாலைக்குள் பொருத்தி, பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைத்தவுடன்தான் இங்கிருந்து செல்வேன், அதுவரை ஊராட்சி மன்ற அலுவலகத்திலே இருப்பேன் என வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் தெரிவித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story