பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள்


பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள்
x
தினத்தந்தி 29 Jun 2019 4:00 AM IST (Updated: 29 Jun 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் சிறுகன்பூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பங்கேற்றார்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற வேண்டிய கிராம சபைக்கூட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததன் காரணமாக, நேற்று மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சியிலும் கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் சிறுகன்பூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் சிறுகன்பூர் ஊராட்சியில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது. பொதுமக்கள் தங்களது பகுதியில் குடிநீர், மின்விளக்கு, பொது சுகாதார வளாகம் உள்ளிட்ட தேவைகளை கோரினர். பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர் சாந்தா நிறைவேற்ற முடிந்த திட்டங்களை காலம் தாழ்த்தாது செயல்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து கலெக்டர் சாந்தா பேசுகையில், பொதுமக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களிலும், பொது இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பருவமழை தவறியதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுபாட்டை போக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் பொதுமக்கள் அனைவரும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி, மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

இதில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மகாலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி, தாசில்தார் ஷாஜஹான் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் புதுநடுவலூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் புதுநடுவலூர் ஊராட்சியில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது. அப்போது பொதுமக்கள் தங்களது பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை தீர்க்க வேண்டும், தெரு மின்விளக்கு, பள்ளி, அரசு பஸ் இயக்கிட வேண்டும் உள்ளிட்ட தேவைகளை கோரினர். பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி நிறைவேற்ற முடிந்த திட்டங்களை காலம் தாழ்த்தாது செயல்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குனர் ராஜசேகரன், உதவி இயக்குனர் கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகம், தாசில்தார் பாரதிவளவன், வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன், ஊராட்சி செயலாளர் மணிவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story