முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் உடல் சொந்த ஊரில் அடக்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அஞ்சலி


முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் உடல் சொந்த ஊரில் அடக்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 28 Jun 2019 10:30 PM GMT (Updated: 28 Jun 2019 7:41 PM GMT)

கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாசின் உடல் குடும்ப கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கருங்கல்,

கருங்கல் அருகே காட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் குமாரதாஸ் (வயது 68). இவர் 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார். நேற்று முன்தினம் சென்னையில் உள்ள மகளை பார்ப்பதற்காக குடும்பத்துடன் காரில் புறப்பட்டார். திண்டிவனம் பகுதியில் சென்ற போது குமாரதாசுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தார். அவர் மாரடைப்பால் இறந்தது தெரிய வந்தது.

இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாசின் உடல் நேற்று காலை 10 மணிக்கு அவரது சொந்த ஊரான காட்டுக்கடைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

குமாரதாஸ் உடலுக்கு வசந்த குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், மனோதங்கராஜ், அ.தி.மு.க. குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜான்தங்கம், பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஜெகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசுவாமி உள்பட ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், மாலை 5 மணிக்கு அருகில் உள்ள ஆலயத்தில் இறுதி பிரார்த்தனை நடத்தப்பட்டு குடும்ப கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ் மாநில காங்கிரஸ் மாநில துணைத்தலைவரும், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவருமான டாக்டர் குமாரதாஸ் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். டாக்டர் குமாரதாஸ் கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டவர். குமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர்.

டாக்டர் குமாரதாசின் இழப்பு என்பது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும், கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாகவும், என் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story