பேச்சிப்பாறை அணை திறப்பு 64 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்


பேச்சிப்பாறை அணை திறப்பு 64 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
x
தினத்தந்தி 29 Jun 2019 4:30 AM IST (Updated: 29 Jun 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணை நேற்று திறக்கப்பட்டது. இதனால் 64 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ ஆகிய இருபோக சாகுபடி நடந்து வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததாலும், மழை பெய்யாததாலும் அணை திறப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குமரி மாவட்ட கன்னிப்பூ, கும்பப்பூ சாகுபடிக்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து 28-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார். அதன்படி தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் நேற்று பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டனர்.

பின்னர் தளவாய் சுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பேச்சிப்பாறை அணையில் தற்போது 13.20 அடி நீர்மட்டமும், பெருஞ்சாணி அணையில் 38.25 அடி நீர்மட்டமும், சிற்றார் 1-ல் 7.60 அடி நீர்மட்டமும், சிற்றார் 2-ல் 7.71 அடி நீர்மட்டமும் தண்ணீர் உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குமரி மாவட்ட விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2 அணைகளில் இருந்து கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு தண்ணீர் வழங்க ஆணை பிறப்பித்தார்.

அதன்படி 2019-20-ம் ஆண்டு கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ சாகுபடிக்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 850 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 64 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். எனவே விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு அதிக மகசூல் பெற வேண்டும். இவ்வாறு தளவாய் சுந்தரம் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அரி, மாவட்ட அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜான் தங்கம், மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ராஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு) வேத அருள்சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) குணபாலன், திருவட்டார் தாசில்தார் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் (பேச்சிப்பாறை) அருள்செழியன், மாவட்ட பாசன சங்க தலைவர் வின்ஸ் ஆன்றோ, பத்மதாஸ், புலவர் செல்லப்பா, மருங்கூர் செல்லப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story