பறக்கும் ரெயில் நிலையங்களில் கூடுதலாக தனியார் பாதுகாவலர்களை நியமிக்க முடிவு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை
பறக்கும் ரெயில் நிலையங்களில் ரெயில்வே பாதுகாப்பு படையினருடன் இணைந்து பணியாற்ற தனியார் பாதுகாவலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு பறக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. இங்குள்ள பறக்கும் ரெயில் நிலையங்களில் 2 தளங்கள் உள்ளது. அதில் தரை தளத்தில் டிக்கெட் கவுண்ட்டர்களும், 2-வது தளத்தில் பறக்கும் ரெயில்களும் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பறக்கும் ரெயில் நிலையம் என்பது பயணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
தரமணி பறக்கும் ரெயில் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் இரவு மயிலாப்பூர் செல்ல காத்திருந்த 19 வயது இளம்பெண்ணிடம் ரெயில்வே ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் பறக்கும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க புது முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் பறக்கும் ரெயில் நிலையங்களில் ரெயில்வே பாதுகாப்பு படையினருடன் இணைந்து பணியாற்ற தனியார் பாதுகாவலர்களை நியமிக்க முடிவு செய்துள்ளனர். இதில் 360 காலியிடங்கள் உள்ளது. இந்த பணியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் தனியார் பாதுகாவலர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு ‘டெண்டர்’ விடப்பட்டு, அதில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் அதிகம் பணியாற்றும் நிறுவனத்திற்கு ‘டெண்டர்’ வழங்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story