விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம்: கிராம நிர்வாக அலுவலகங்களில் இன்று சிறப்பு முகாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம்: கிராம நிர்வாக அலுவலகங்களில் இன்று சிறப்பு முகாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 29 Jun 2019 4:45 AM IST (Updated: 29 Jun 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் ரூ.6ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் பெயரை சேர்க்க தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் இன்று(சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக, கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் வர்த்தகரெட்டிபட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு, ஊராட்சி செலவின கணக்கு பராமரித்தல், டெங்கு ஒழிப்பு, கிராம ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பிளாஸ்டிக் ஒழிப்பு, பசுமை வீடுகள் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு, முழு சுகாதார திட்டத்தின்கீழ் கழிப்பறைகள் பயன்படுத்துபவர்களை பாராட்டுதல், சுகாதார வளாகம் பராமரித்தல், குடிநீர் சிக்கனம் தொடர்பான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசியதாவது;-

தேசிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ந்தேதி, ஜனவரி 26-ந்தேதி, மே 1-ந்தேதி, அக்டோபர் 2-ந்தேதி உள்ளிட்ட தினங்களில் கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மே 1-ந்தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் கிராமசபை கூட்டம் நடத்த முடியவில்லை. அதற்கு பதிலாக தற்போது தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது. கிராம ஊராட்சியில் வரவு செலவு கணக்கு மற்றும் முக்கிய திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் பொதுமக்கள் ஒப்புதலுடன் முடிவுகள் எடுக்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின்கீழ் கிராம நிர்வாக அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு விவசாயிகளின் பெயர் சேர்க்க நாளை (அதாவது இன்று) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முழு சுகாதார திட்டத்தின்கீழ் அனைத்து இல்லங்களிலும் தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மற்றும் கழிப்பிடம் கட்ட இடம் இல்லாதவர்களுக்கு சமுதாய கழிப்பிடம் கட்டித்தரவும், ஏற்கனவே சமுதாய கழிப்பிடம் இருந்தால் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பல்வேறு கடன் உதவி திட்டங்கள் உள்ளது. அரசின் திட்டங்களை பொதுமக்கள் பெற்று பயன்பெற வேண்டும். ஜனசக்தி அபியான் திட்டத்தின் மூலம் குடிநீர் சிக்கனம், நிலத்தடி நீரை பாதுகாத்தல், மழைநீர் சேகரித்தல், கிராம குட்டைகளை அமைத்து பராமரித்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 1990-ம் ஆண்டு முதல்முதலில் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது அதனை பொதுமக்கள் அனைவரும் மழைநீர் சேமிப்பு இயக்கமாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அப்போது பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று பொருளாக துணி பைகளை கலெக்டர் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ராஜ் ஜீத்சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story