கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கொடுத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு தடுக்க வந்த தாயாரையும் வெட்டினர்
கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் நாம் தமிழர் கட்சி நிர்வாகியை அரிவாளால் வெட்டிய மர்மநபர்கள், தடுக்க வந்த அவருடைய தாயாரையும் வெட்டினர்.
பூந்தமல்லி,
திருவேற்காடு மேல் அயனம்பாக்கம், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சுதாகர்(வயது 31). நாம் தமிழர் கட்சியின் நகர கிளை செயலாளராக உள்ளார். நேற்றுமுன்தினம் இரவு இவர், தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்குவந்த மர்மநபர்கள் சுதாகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினர். இதில் அவரது கையில் வெட்டு விழுந்தது. உடனே சுதாகர் தப்பி ஓடினார்.
தாயாருக்கும் வெட்டு
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய தாயார் ராணி மற்றும் அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து தடுக்க முயன்றனர். அப்போது மர்மநபர்கள் சுதாகரின் தாயார் ராணியின் தலையிலும் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் படுகாயம் அடைந்த சுதாகர், ராணி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கஞ்சா விற்பனை
இதுகுறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து சுதாகர் திருவேற்காடு போலீசாரிடம் அடிக்கடி தகவல் கொடுத்து வந்தார். அதன்பேரில் போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிலரை கைது செய்தனர்.
இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சுதாகரை தீர்த்துக்கட்டும் நோக்கில் மர்மநபர்கள், அவரை அரிவாளால் வெட்டியதும், அவரது தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால் அவரது தாயாரையும் வெட்டிவிட்டு மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டதும் தெரிந்தது. மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story