வடக்குப்பட்டு ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
வடக்குப்பட்டு ஊராட்சி யில் நடந்த கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள வடக்குப்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஒன்றிய உதவி பொறியாளர் சுப்புராஜ் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். இதில் வடக்குப்பட்டு ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதனையடுத்து ஊராட்சி செயலாளர் அரசு அறிவித்திருந்த தீர்மானங்களை கிராமசபை கூட்டத்தில் வாசித்தார். பின்னர் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினைகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரித்தல் மற்றும் ஊராட்சிக்கு சொந்தமான குளங்களை சீரமைக்கவும் அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றவும் கோரிக்கை வைத்தனர்.
அப்போது அதிகாரிகள் உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தனர். அப்போது ஆவேசம் அடைந்த பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதோடு சரி. இதுவரை முழுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த பகுதியில் ஒரே ஒரு ரேஷன் கடை மட்டுமே உள்ளது. கூடுதலாக ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று தெரிவித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி செயலாளர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அரிய வகை மரங்கள்
கரசங்கால் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் நாசர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் கரசங்கால் ஊராட்சி பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் குப்பைகளை கொட்டி தீயிட்டு எரித்து வருகின்றனர்.
இதனால் காடுகளில் உள்ள அரிய வகை மரங்கள் அழிந்து வருகின்றன. எனவே இங்கு உள்ள குப்பைகளை வேறு இடத்திற்கு மாற்றவும் இந்த பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக ஊராட்சி செயலாளர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story