கவுரிவாக்கத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறதா? காஞ்சீபுரம் கலெக்டர் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
கவுரிவாக்கத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய காஞ்சீபுரம் கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை கவுரிவாக்கத்தைச் சேர்ந்தவர் என்.நாகேஸ்வர ராவ். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சென்னை தாம்பரம் தாலுகா, செம்பாக்கம் நகராட்சிக்குட்பட்ட கவுரிவாக்கம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை திருடி லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலமாக விற்பனை செய்கின்றனர்.
விவசாய தேவைகளுக்காக மின் இணைப்பைப் பெற்றுவிட்டு, தற்போது அந்த மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீரை வணிகநோக்கில் விற்பனை செய்கின்றனர். உரிமம் பெறாமல் இரவு, பகலாக தண்ணீர் திருடப்படுகிறது.
இதுகுறித்து புகார் செய்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. எங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்ச தடை விதித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
பறிமுதல்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறதா? தண்ணீரை உறிஞ்சி விற்பனை செய்ய அவர்கள் உரிமம் பெற்றுள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி, புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்பட்டால், தண்ணீர் எடுத்து செல்லும் வாகனங்களையும், தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்தப்படும் மோட்டார்களையும் பறிமுதல் செய்யவேண்டும்.
நிலத்தடி நீரை திருடி, விற்பனை செய்த நபர்கள் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை வருகிற 1-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story