சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா
கோவை நகரில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா நடத்தினார்கள்.
கோவை நகரம் முழுவதும் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய
வேண்டும், குடிநீர் வினியோக உரிமையை பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும், பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்ணா நடைபெற்றது.
கோவை சிவானந்தாகாலனி அருகே நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கோரிக்கைகள் குறித்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா உள்ளிட்டோர் பேசினார்கள். தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்ட கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:-
கோவை நகரில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் சீரற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக கோவை நகர பகுதியில் குடிநீர் வினியோகத்தை பிரான்ஸ் நாட்டு சூயஸ் நிறுவனத்திற்கு வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில் குடிநீர் வினியோகம் சீரற்ற முறையில் வினியோகிக்கப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறை இருப்பது போன்று செயற்கையாக தோற்றத்தை ஏற்படுத்தி சூயஸ் நிறுவனம் வந்தால் குடிநீர் வினியோகம் 24 மணிநேரமும் சீராக இருக்கும் என்பது போன்று திட்டமிட்டே கோவை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்த பிரசாரத்தையும் சூயஸ் நிறுவன ஊழியர்களுடன் சேர்ந்து மாநகராட்சி ஊழியர்களும் குடியிருப்பு பகுதி மக்களிடம் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கருப்பையா, என்.ஜெயபாலன், வி.பெருமாள், கே.மனோகரன், ஆர்.வேலுசாமி, கே.அஜய்குமார், கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story