எரிபொருட்களை கொண்டு செல்வதற்காக, விளை நிலங்களில் பதிக்க வைத்திருந்த குழாய்களுக்கு தீ வைப்பு - போலீசார் விசாரணை


எரிபொருட்களை கொண்டு செல்வதற்காக, விளை நிலங்களில் பதிக்க வைத்திருந்த குழாய்களுக்கு தீ வைப்பு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 Jun 2019 4:45 AM IST (Updated: 29 Jun 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே எரிபொருட்களை கொண்டு செல்வதற்காக விளை நிலங்களில் பதிக்க வைத்திருந்த குழாய்களுக்கு யாரோ தீ வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் எரிவாயு திட்டம், ஷேல் எரிவாயு திட்டம் போன்ற திட்டங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் குறையும் என கூறி விவசாயிகள் மட்டுமின்றி பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் விளைநிலங்களின் வழியாக எரிபொருட்களை கொண்டு செல்ல குழாய்கள் பதிக்கப்பட்டு வருவதையும் விவசாயிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். நாகை மாவட்டம் நரிமணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் சுத்திகரிக்கப்படுகிறது. இந்த எரிபொருட்கள் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் கூடுதல் செலவும், காலவிரயமும் ஏற்பட்டு வருவதால் பூமிக்கு அடியில் குழாய் பதித்து எண்ணெய் பொருட்களை கொண்டு செல்ல எண்ணெய் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி நாகை மாவட்டம் நரிமணத்தில் இருந்து திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குவரை பூமிக்கு அடியில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் நாகை மாவட்டத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விளைநிலங்கள் வழியாக குழாய் பதிக்கப்படுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே அருந்தவபுரத்தில் பூமிக்கு அடியில் குழாய் பதிப்பதற்காக இரும்பு குழாய்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு வயல்களில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.

அங்கு விளை நிலங்களில் குழாய் பதிக்கக்கூடாது என அந்த பகுதி விவசாயிகள் கடந்த சில நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் வயல்களில் போடப்பட்டிருந்த குழாய்களுக்கு தீ வைத்தனர். குழாய்களின் உள்பகுதியில் ரசாயன பூச்சுக்கள் இருந்ததால் அவை தீப்பிடித்து எரிந்தது.

ஆனால், இரும்பு குழாய்கள் என்பதால் குழாய்களுக்கு பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அந்த குழாய்களுக்கு தீ வைத்தது யார்? என்பது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளைநிலங்களில் பதிக்க வைத்திருந்த குழாய்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story