கூடலூர் அருகே நெலாக்கோட்டை, கடைவீதியில் உலா வந்த காட்டு யானை - பொதுமக்கள் பீதி


கூடலூர் அருகே நெலாக்கோட்டை, கடைவீதியில் உலா வந்த காட்டு யானை - பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 29 Jun 2019 4:00 AM IST (Updated: 29 Jun 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே நெலாக்கோட்டை கடை வீதியில் காட்டு யானை உலா வந்ததால் பொதுமக்கள் பீதியுடன் ஓட்டம் பிடித்தனர்.

கூடலூர், 

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது நாளுக்கு,நாள் அதிகரித்து வருகிறது. யானை வழித்தடங்களை மறித்து மின்வேலிகள் அமைத்தல், வனத்தில் பசுந்தீவன தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் காட்டு யானைகள் ஊருக்குள் வருகிறது.

இதனிடையே கூடலூரில் இருந்து கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் நெலாக்கோட்டை கடைவீதி உள்ளது.

இங்கு ஏராளமான பொதுமக்கள் மளிகை, வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வருகின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக காட்டு யானையின் நடமாட்டம் காணப்படுகிறது. இரவு அல்லது அதிகாலை நேரத்தில் கடை வீதிக்கு வரும் காட்டு யானையால் இங்குள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு நெலாக்கோட்டை தனியார் தோட்டத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கூடலூர்- சுல்தான்பத்தேரி சாலையில் நடந்து சென்றது. பின்னர் நெலாக்கோட்டை கடைவீதியில் உலா சென்ற இந்த யானையை கண்ட பொதுமக்கள் பீதியுடன் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர்.

அப்போது சாலையில் நின்ற தெருநாய்கள் காட்டு யானையை கண்டு குரைத்தன. இதனால் ஆத்திரம் அடைந்த காட்டு யானை வாலை முறுக்கியவாறு தெருநாய்களை விரட்டியது. இதனால் நாய்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தன. மேலும் காட்டு யானை வருவதை அறிந்த வாகன ஓட்டிகள் வந்த வழியாக திரும்பி சென்றனர். பின்னர் பிதிர்காடு செல்லும் சாலையில் காட்டு யானை நடந்து சென்றது. அப்போது எதிரே வந்த மினி லாரியை துரத்தியது. இதனால் அந்த டிரைவர் பயத்தில் விரைவாக மினி லாரியை திருப்பி கொண்டு சென்றார்.

இதையடுத்து காட்டு யானை அங்கிருந்த சாலையோர பள்ளத்தில் இறங்கி வனத்துக்குள் சென்றது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். காட்டு யானை காலை நேரத்தில் உலா வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

இந்த பகுதியில் முன்பு புலி அடிக்கடி பொதுமக்கள் வளர்த்து வந்த கால்நடைகளை கொன்று வந்தது. தற்போது காட்டு யானை ஊருக்குள் வரும் நிலை வந்து விட்டது. விலங்கூர் பகுதியில் 7 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இங்கு அவைகளுக்கு பிடித்தமான பசுந்தீவனங்கள், தண்ணீர் கிடைக்கிறது. இதனால் அங்கிருந்து யானைகள் செல்வது இல்லை.

இதனால் எந்த திசையில் இருந்து காட்டு யானை ஊருக்குள் வருமோ? என்ற அச்சத்தில் நடமாட வேண்டியதாகி விட்டது. காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story