நிலக்கோட்டை போலீஸ் நிலையம் அருகே, கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை திருடிய வாலிபர் கைது
நிலக்கோட்டை போலீஸ் நிலையம் அருகே கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டை,
நிலக்கோட்டை அருகே உள்ள வீலிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 30). இவர், நிலக்கோட்டை போலீஸ் நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 9-ந்தேதி ரகுநாதன், வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடைக்குள் சென்று பார்த்தபோது, விலையுயர்ந்த 25 செல்போன்கள் மற்றும் மெமரி கார்டுகள் திருடு போயிருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ரகுநாதன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் நிலையம் அருகே நடந்த திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மர்மநபர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படையினர் திருடப்பட்ட செல்போன் எண்களின் ஐ.எம்.இ.ஐ. நம்பரை வைத்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் ஆய்வு செய்தனர்.
அப்போது கடையின் பூட்டை உடைத்து திருடியது கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த பால்தினகரன் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மீதமுள்ள செல்போன்களை திருவனந்தபுரம், கொடைக்கானல், பழனி பகுதியில் விற்பனை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story