ராஜபாளையத்தில், 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு
ராஜபாளையத்தில் கடை முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களை தீவைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் ரெயில்வே பீடர் சாலையில் பிச்சிப்பூ என்பவர் டிராவல்ஸ் அலுவலகம் நடத்தி வருகிறார். அவரது உறவினரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த விஜயகுமார், ராஜபாளையத்தை சேர்ந்த இன்பமணி, சரவணன் மற்றும் வீரபாண்டி ஆகியோர் நேற்று முன்தினம் வந்தனர். அன்றைய தினம் இரவு உறவினர்கள் 4 பேரும் பிச்சிப்பூவின் டிராவல்ஸ் அலுவலகத்தில் தங்கி உள்ளனர்.
முன்னதாக அவர்கள் தங்களது 3 மோட்டார் சைக்கிள்களை அலுவலகம் முன்பு வெளியே நிறுத்தி வைத்திருந்தனர். இந்தநிலையில் நள்ளிரவு நேரத்தில் அந்த மோட்டார் சைக்கிள்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்து சென்றனர்.
இதனால் அலுவலகம் முன்பாக புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த விஜயகுமார் உள்பட 4 பேரும் வெளியே சென்று பார்த்தபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களது மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தன. உடனடியாக ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
இருப்பினும் 3 மோட்டார் சைக்கிள்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின. முன்னதாக புகை மண்டலத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு விஜயகுமார் உள்பட 4 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
ராஜபாளையத்தில் பிரதான சாலையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story