முன்னாள் மாணவ, மாணவிகளுக்கும் இன்னும் 3 மாதத்தில் மடிக்கணினி ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


முன்னாள் மாணவ, மாணவிகளுக்கும் இன்னும் 3 மாதத்தில் மடிக்கணினி ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 30 Jun 2019 5:00 AM IST (Updated: 29 Jun 2019 6:57 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் மாணவ, மாணவிகளுக்கும் இன்னும் 3 மாதத்துக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு, 

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல்–அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் கருத்தரங்கம் ஈரோட்டில் 3 நாட்கள் நடந்து வருகிறது. இதில் 2–வது நாளாக நேற்று நடந்த கருத்தரங்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு துறையும் தமிழகத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதற்கு கடந்த ஜனவரி மாதம் 1–ந் தேதி அன்று பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது.

பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரையில் தற்போதுள்ள பாடத்திட்டங்களை மாணவர்கள் 240 நாட்கள் படிக்க வேண்டியுள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்களாகும். எனவே பிளஸ்–1, பிளஸ்–2 படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கி விலையில்லா மடிக்கணினிகளை கொடுத்து வருகிறோம். கடந்த 2017–2018–ம் கல்வி ஆண்டில் படித்த மாணவ–மாணவிகள் சற்று பொறுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் மாணவ–மாணவிகள் தங்களது ஓய்வு நேரங்களில் பாடத்திட்டங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கும் செய்து படிக்கும் வகையில், அவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன்பிறகு முன்னாள் மாணவ–மாணவிகளுக்கு 3 மாதங்களில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படும்.

இதேபோல் தமிழகத்தில் பல்வேறு நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளது. வருகிற 1–ந் தேதி சட்டசபையில் சுற்றுச்சூழல் மானிய கோரிக்கையும், 2–ந் தேதி பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையும் நடக்கிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்விக்காகவே ஒரு தொலைக்காட்சியை கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறோம்.

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாகனங்கள் செல்வதற்கு வனத்துறை சார்பில் கட்டணம் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு தமிழக முதல்–அமைச்சரிடம் எடுத்துக்கூறி நுழைவு கட்டணம் வசூலிக்கும் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மேலும், 24 மணிநேரமும் லாரிகள் சென்று வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகம்–கர்நாடகா ஆகிய 2 மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தங்குதடையின்றி இருக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிலர் தூண்டிவிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக கூறினார்கள். இதற்கு போராட்டம் எதுவும் தேவையில்லை. இந்த அரசு மக்களின் மனிதநேயத்துடன் பணிகளை செய்து வருகிறது. மக்கள் தங்களுடைய கோரிக்கையை எடுத்துக்கூறினாலே செய்து கொடுக்கும் அரசாக உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


Next Story