கலசபாக்கம், கண்ணமங்கலம், வாணாபுரத்தில் விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் சாலைமறியல்


கலசபாக்கம், கண்ணமங்கலம், வாணாபுரத்தில் விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 30 Jun 2019 4:15 AM IST (Updated: 29 Jun 2019 10:06 PM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம், கண்ணமங்கலம், வாணாபுரத்தில் விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் சாைல மறியலில் ஈடுபட்டனர்.

கலசபாக்கம், 

கலசபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட லாடவரம், கலசபாக்கம் ஆண்கள் மற்றும் பெண்கள், கடலாடி, வில்வாரணி, ஆதமங்கலம்புதூர் ஆண்கள் மற்றும் பெண்கள், மேல்சோழங்குப்பம் ஆகிய பள்ளிகளில் தற்போது படிக்கும் 676 மாணவ, மாணவிகளுக்கு சுமார் ரூ.2 கோடியே 65 லட்சம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நேற்று கலசபாக்கம், வில்வாரணி, ஆதமங்கலம்புதூர் ஆகிய பள்ளிகளில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மடிக்கணினிகளை வழங்கி பேசினார்.

மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்ற கலசபாக்கம், வில்வாரணி ஆகிய பள்ளிகளின் முன்பு முன்னாள் மாணவர்கள் முற்றுகையிட்டு தங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதேபோல் ஆதமங்கலம்புதூர் பள்ளியை முன்னாள் மாணவர்கள் முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. முன்னாள் பள்ளி மாணவர்களிடம் பேசுகையில், அரசு சார்பில் தற்போது படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தொடர்ந்து இன்றும் ஒரு சில வாரங்களில் 2018-19, 2017-18 ஆண்டு படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று மாணவர்களை சமரசம் செய்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 2017-18 மற்றும் 2018- 19-ம் கல்வியாண்டில் படித்த பிளஸ்-2 மாணவ, மாணவிகள் தங்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி நேற்று பள்ளி எதிரில் படவேடு கண்ணமங்கலம் செல்லும் சாலையில் மறியல் செய்தனர்.

இத குறித்து தகவறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்து சமரசம் செய்ததின் பேரில் கலைந்து சென்றனர். பின்னர் அவர்கள் முறைப்படி அரசு எங்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவை பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசனிடம் அளித்தனர்.

வாணாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது படிக்கும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் படித்து முடித்து சென்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 60-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் நேற்று காலை 10 மணி அளவில் கள்ளக்குறிச்சி -திருவண்ணாமலை சாலையில் வாணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணாபுரம் போலீசார் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுத்து மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story