ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர்: குழாய்கள் பதிக்க குழி தோண்டும் பணிகள் தொடக்கம்
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்ற கொண்டு செல்லப்படும் குழாய்கள் பதிக்க குழி தோண்டும் பணிகள் தொடங்கியது.
ஜோலார்பேட்டை,
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது. குடிநீர் பஞ்சத்தை போக்கும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து டேங்கர் ரெயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் என அறிவித்தார். அதற்கான முதற்கட்டமாக ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான ஆய்வு பணிகள் கடந்த வாரம் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு 2-வது கட்டமாக குடிநீர் வடிகால் வாரியம், ரெயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து 3½ கிலோமீட்டர் தூரம் வரை உள்ள ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகில் பார்சம்பேட்டை ரெயில்வே கேட் என்ற இடத்தில் ரெயில்வேக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு எவ்வாறு குடிநீர் எடுத்து செல்வது என ஆலோசித்தனர்.
இந்த நிலையில், குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் இருந்து பெரிய குழாய்கள் லாரிகளில் எடுத்து வரப்பட்டது. அந்த குழாய்கள் அனைத்தும் மேட்டுசக்கரகுப்பம் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அருகில் இருந்து ஆஞ்சநேயர் கோவில் வழியாக சாலையோரம் பொக்லைன் எந்திரம் மூலம் இறக்கி வைக்கப்பட்டது.
குழாய்கள் பதிப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பார்சம்பேட்டை ரெயில்வே கேட் பகுதியில் நேற்று குழிகள் தோண்டப்பட்டது.
இப்பணியினை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது குழாய்கள் தோண்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. விரைவில் குழாய்கள் பதிக்கப்பட்டு, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து 3½ கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரெயில்வே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்றப்படும். அதன்பிறகு டேங்கர் ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்லப்படும் என்றனர்.
Related Tags :
Next Story