மேட்டுப்பாளையம் அருகே கவுரவக்கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கவுரவக்கொலை செய்யப்பட்ட சிறுமி வர்ஷினி பிரியாவின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப் படைக்கப்பட்டது.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடைக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 45), தொழிலாளி. இவருடைய மனைவி பூவாத்தாள். இவர்களுடைய மகன்கள் வினோத்குமார் (25), கனகராஜ் (22), கார்த்திக் (19). இவர்கள் 3 பேரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆவர். கனகராஜ் அதே பகுதியில் உள்ள வெள்ளிப்பாளையம் சாலையில் உள்ள அமுதாவின் மகள் வர்ஷினி பிரியா (16) என்பவரை காதலித்து வந்தார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலை கனகராஜின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக கனகராஜின் அண்ணன் வினோத்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி மாலை வினோத்குமார் தனது தம்பி கனகராஜ் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார். அங்கு காதலி வர்ஷினி பிரியாவும் இருந்தார். அப்போது அண்ணன்-தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் கனகராஜை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதை தடுக்க வந்த சிறுமி வர்ஷினி பிரியாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த வர்ஷினி பிரியா சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் வாலிபரை அவரது அண்ணனே கவுரவக்கொலை செய்த சம்பவம் கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வினோத்குமார் மீது கொலை, வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். வர்ஷினி பிரியாவின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் நேற்று வைக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் வர்ஷினி பிரியாவின் தாயார் அமுதா மற்றும் உறவினர்கள், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைப்பாளர் சுசி கலையரசன், வக்கீல் வெண்மணி உள்பட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்றுக்காலை கூடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
வர்ஷினி பிரியாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று போலீசார் விடுத்த கோரிக்கையை அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள். கோரிக்கைகள் குறித்து அவர்கள் கூறியதாவது:-
வர்ஷினி பிரியாவின் கொலையில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருக்கிறது. அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். அவர்களை ஜாமீனில் விடக்கூடாது. இந்த கொலை வழக்கில் 15 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட வர்ஷினி பிரியாவின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, அரசு வீடு, ரூ.25 லட்சம் இழப்பீடு ஆகியவை வழங்க வேண்டும். மேலும் வர்ஷினி பிரியாவின் பிரேத பரிசோதனையை 5 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் கோட்ட வருவாய் அதிகாரி முன்னிலையில் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிப்போம். உடலை வாங்குவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதனால் பிரேத பரிசோதனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், வடக்கு கோட்ட வருவாய் அதிகாரி சுரேஷ் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு பகல் 12 மணியளவில் வந்தனர். அவர்கள் சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சிறுமியின் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினரும், போலீசாரும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை தொடங்கியது. அவை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் கூறியதாவது:-
கவுரவக்கொலை வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கோர்ட்டில் வழக்கு நடத்தப்படும். மற்ற கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினர் ஏற்றுக்கொண்டதால் பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரேத பரிசோதனை முடிந்து மாலை 4.30 மணிக்கு வர்ஷினி பிரியாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உடல் ஆம்புலன்சு மூலம் மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டு அவருடைய பாட்டி ரங்கம்மாள் வீட்டில் வைக்கப்பட்டது. அதன் பின்னர் இறுதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள கனகராஜ் படுகொலை செய்யப்பட்ட இடத்தின் அருகே வந்தபோது, கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் முடிவு ஏற்படாததால் அவர்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர். பின்னர் இறுதி ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு எல்.ஐ.சி.க்கு அருகே உள்ள மயானத்தை அடைந்தது. அங்கு வர்ஷினி பிரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கவுரவக்கொலை செய்யப்பட்ட வர்ஷினி பிரியாவின் குடும்பத்தினருக்கு உடுமலை கவுசல்யா, தமிழ் புலிகள் அமைப்பு தலைவர் நாகை திருவள்ளுவன் ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ஆறுதல் கூறினார்கள்.
Related Tags :
Next Story