குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து 3 தொழிலாளர்கள் தீயில் கருகி படுகாயம்
குன்னூர் அருகே உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 தொழிலாளர்கள் தீயில் கருகி படுகாயம் அடைந்தனர். மேலும் 3 பேர் மயக்கம் அடைந்து விழுந்தனர்.
குன்னூர்,
குன்னூர் அருகேயுள்ள அருவங்காட்டில் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமானது ஆகும். ராணுவத்தினர் கையாளும் துப்பாக்கி மற்றும் பீரங்கிகளுக்கு பயன்படுத்தப்படும் வெடி மருந்து அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக தொழிற்சாலையில் ரசாயன திரவங்களின் பயன்பாடு அதிக அளவு உள்ளது.
தொழிற்சாலையில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் கார்டைட் பிரிவு என்பது முக்கியமான பிரிவாக உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு பணியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சூரஜ்குமார் (வயது 25), திருச்சியை சேர்ந்த பிரபு ராபின் (30) அருவங்காடு பகுதியை சேர்ந்த சற்குண முரளி (35) உட்பட 6 பேர் பணியில் இருந்தனர்.
அப்போது நள்ளிரவு 12.45 மணியளவில் திடீரென்று அழுத்தம் அதிகமாகி வெடிபொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த வெடி விபத்தில் சூரஜ்குமார், பிரபு ராபின், சற்குண முரளி ஆகியோர் தீயில் கருகி படுகாயம் அடைந்தனர். மற்ற 3 பேரும் மயக்கம் அடைந்து விழுந்தனர். இதையடுத்து வெடி மருந்து தொழிற்சாலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அங்கிருந்த 6 பேரையும் மீட்டு வெடிமருந்து தொழிற்சாலை ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சூரஜ்குமார், பிரபு ராபின், சற்குண முரளி ஆகிய 3 பேரும் கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மயக்கம் அடைந்த 3 பேரும் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
விபத்து குறித்து தொழிற்சாலை பொது மேலாளர் பினோத்குமார் சிங் சார்பில் மக்கள் தொடர்பு அலுவலரும் தொழிற்சாலை உதவி இயக்குனருமான லூயிஸ்காஹா கூறியதாவது:-
நள்ளிரவு 12.45 மணியளவில் கார்டைட் பிரிவு 74/7 கட்டிடத்தில் ஹைட்ராலிக் அழுத்தம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. உடனடியாக அந்த கட்டிடத்தில் பணியாற்றியவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் சூரஜ் குமாருக்கு 50 முதல் 60 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இவர் கோவை தனியார் ஆஸ்பத்தியில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரபு ராபின், சற்குண முரளி ஆகிய இருவருக்கும் 20 முதல் 30 சதவீதம் தீக்காயம் ஏற்ப்பட்டுள்ளது. விபத்து குறித்து துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே கட்டிடத்தில் ஒரு வெடி விபத்து ஏற்பட்டது அப்போது அங்கு ஆய்விற்கு வந்த அப்போதைய பொது மேலாளர் மற்றும் உயர் அதிகாரி ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பினர். அடிக்கடி விபத்து ஏற்படுவது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- வெடிபொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதற்கு பயன்படுத்தபடும் எந்திரங்கள் பழமையானது ஆகும். தொழிற்சாலையை நவீனப்படுத்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். இருப்பினும் அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. மேலும் உற்பத்திக்கான கச்சா பொருட்களும் தரமானதாக இல்லை. எனவே விபத்து ஏற்படுவதை தடுக்க தரமான கச்சா பொருட்களை பெறுவதோடு, தொழிற்சாலையையும் நவீனப்படுத்த முன்வர வேண்டும். மேற்கண்டவாறு அவர்கள் கூறினர்கள்.
Related Tags :
Next Story