ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு மலை ரெயில் மீண்டும் இயக்கம் சுற்றுலா பயணிகள் இல்லாததால் வெறிச்சோடியது


ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு மலை ரெயில் மீண்டும் இயக்கம் சுற்றுலா பயணிகள் இல்லாததால் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 30 Jun 2019 4:45 AM IST (Updated: 29 Jun 2019 11:03 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு மலை ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாததால் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன.

ஊட்டி,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் மலைகளை குடைந்து ரெயில் பாதை அமைக்கப்பட்டு, கடந்த 1908-ம் ஆண்டு முதல் மலை ரெயில் சேவை தொடங்கியது. தற்போது சுற்றுலா பயணிகளுக்காகவே இந்த மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி மலை ரெயில் மற்றும் ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களை பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

குகை, மலைகளை கடந்து செல்லும் மலை ரெயிலில் பயணம் செய்ய உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டுகிறார்கள். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனையொட்டி ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்களுக்காக ஊட்டி-கேத்தி இடையே ‘ஜாய் ரைடு’ என்ற பெயரில் தினமும் 3 முறை சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கோடை சீசன் முடிந்த பின்னர் சிறப்பு மலை ரெயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டனர். இதையடுத்து கடந்த 24-ந் தேதியுடன் சிறப்பு மலை ரெயில் இயக்கம் நிறுத்தப்படுவதாக ரெயில்வே அறிவித்தது. அதனை தொடர்ந்து வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும். அவர்கள் பயணிப்பதற்காக ஊட்டி-கேத்தி இடையே வார விடுமுறை நாட்களில் தினமும் மூன்று முறை மீண்டும் சிறப்பு மலை ரெயிலை இயக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி நேற்று முதல் சிறப்பு மலைரெயில் மீண்டும் இயக்கப்பட்டது.

ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 9.40 மணிக்கு, காலை 11.30 மணிக்கு, மாலை 3 மணிக்கு சிறப்பு மலை ரெயில் புறப்பட்டு லவ்டேல் வழியாக கேத்தியை சென்றடைந்தது. இந்த ரெயிலில் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு, அதில் 146 இருக்கைகள் இருந்தன. தற்போது சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டதால், ஒரு முறை இயக்கப்பட்ட ரெயிலில் 15 முதல் 30 இருக்கைகள் மட்டுமே நிரம்பின. மீதம் உள்ள பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்ததை காண முடிந்தது. இதனால் மலைரெயில் வெறிச்சோடி காணப்பட்டது. முதல் வகுப்பில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.400, 2-வது வகுப்புக்கு ரூ.300 என கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கட்டண உயர்வு மற்றும் பள்ளிகள் திறந்ததால் கூட்டம் குறைவாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story