பொள்ளாச்சியில் குடிபோதையில் கார் ஓட்டியதாக ஆசிரியர் மீது வழக்குப்பதிவு


பொள்ளாச்சியில் குடிபோதையில் கார் ஓட்டியதாக ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 Jun 2019 3:30 AM IST (Updated: 29 Jun 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் குடிபோதையில் கார் ஓட்டியதாக ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36). இவர் ஒரு பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் பொள்ளாச்சியில் இருந்து சூளேஸ்வரன்பட்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். ஓம்பிரகாஷ் தியேட்டர் அருகில் கார் சென்ற போது, குறுக்கே மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த இருதரப்பினரும் கார், மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் நிறுத்தி விட்டு தகராறில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ராஜ்குமார் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

இதையடுத்து காரை பறிமுதல் செய்து, கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். ராஜ்குமாரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில், அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் குடிபோதையில், அதிவேகமாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டி வந்ததாக ஆசிரியர் ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story