அணு கழிவுகளை கொட்டி தமிழகத்தை அழிக்க முயற்சி மத்திய, மாநில அரசுகள் மீது இயக்குனர் கவுதமன் குற்றச்சாட்டு


அணு கழிவுகளை கொட்டி தமிழகத்தை அழிக்க முயற்சி மத்திய, மாநில அரசுகள் மீது இயக்குனர் கவுதமன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Jun 2019 4:30 AM IST (Updated: 29 Jun 2019 11:46 PM IST)
t-max-icont-min-icon

அணுக்கழிவுகளை கொட்டி தமிழகத்தை அழிக்க முயற்சி நடக்கிறது என்று மத்திய, மாநில அரசுகள் மீது திரைப்பட இயக்குனர் கவுதமன் குற்றம்சாட்டினார்.

நாகர்கோவில்,

தமிழ் மொழியையும், இனத்தையும் அழிக்க மத்திய மாநில அரசுகள் முயற்சிக்கின்றன. அதோடு ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை அமல்படுத்தி தமிழகத்தை சுடுகாடாக்க பார்க்கிறார்கள். இந்த திட்டங்களை கொண்டு வர கூடாது என்று வலியுறுத்தி துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் மனு அளித்துள்ளோம்.

ஆனால் தற்போது அணு கழிவுகளையும் கொட்டி தமிழகத்தை மொத்தமாக அழிக்க முயற்சி நடக்கிறது. மத்திய, மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமான திட்டங்களை கொண்டு வரவில்லை. சேலத்தில் 8 வழிச்சாலை திட்டத்துக்கு 9 சதவீதம் மக்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். ஆனால் இத்திட்டத்தை 100 சதவீத மக்களும் எதிர்க்கிறார்கள்.


ஜெயலலிதா ஆட்சியில் எந்தெந்த திட்டங்களை எல்லாம் எதிர்த்தாரோ அந்த திட்டங்களை எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டு வருகிறது. இது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். பிரதமர் நரேந்திரமோடி இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுகிறார். ஒரே நாடு ஒரே ரே‌ஷன் கார்டு என்ற கோ‌ஷத்தின் மூலம் இந்தியாவை பிளவுபடுத்த பார்க்கிறார்.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. அதற்கு தீர்வு காண ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் மக்கள் பிரச்சினைக்காக போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story