ஓசூரில் பரபரப்பு: என்ஜினீயர், மனைவியுடன் ஏரியில் குதித்து தற்கொலை
ஓசூர் அருகே என்ஜினீயர், மனைவியுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர்களது 2 வயது குழந்தையின் கதி என்ன? என்று தெரியவில்லை. தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஓசூர்,
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா ஏரியில் ஒரு பெண்ணின் உடல் மிதப்பதாக ஓசூர் டவுன் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் உடல் உப்பிய நிலையில் இருந்தது. அதே ஏரியில் சற்று தொலைவில் ஒரு ஆணின் உடலும் மிதந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த உடலையும் கைப்பற்றினர்.
பின்னர் 2 உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஏரிக்கரையில் ஒரு மோட்டார் சைக்கிள் நின்று இருந்தது. இதில் 2 வயது குழந்தையின் காலணி இருந்தது. பிணமாக கிடந்தவரின் சட்டை பையில் ஒரு ஓட்டுனர் உரிமம் இருந்தது. இதை வைத்து ஏரியில் பிணமாக மிதந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிணமாக கிடந்தவர் பெயர் கண்ணன் என்றும், காஞ்சீபுரம் மாவட்டம் நெய்குப்பி என்றும் இருந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஏரியில் பிணமாக கிடந்தவர், கண்ணன் (வயது 31), அவரது மனைவி கல்பனா (27) என்பது தெரியவந்தது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை என்ற ஊரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் கண்ணன் என்பதும், கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பொம்மசந்திரா என்ற இடத்தில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
அவர் குடும்பத்துடன் அருகேயுள்ள பெரண்டஹள்ளி என்ற இடத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்ததும் தெரியவந்தது. கண்ணனுக்கு சுமார் ரூ.15 லட்சம் வரை கடன் இருந்ததாகவும், அதை கட்ட முடியாமல் அவர் மனமுடைந்து இருந்ததும் தெரியவந்தது. இதனிடையே கடந்த 26-ந் தேதி அவருடைய தாயார் முத்தம்மாவிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனக்கு கேரள மாநிலம் கொச்சிக்கு பணி இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தான் சேலத்தில் உள்ள நண்பரை பார்த்து விட்டு மனைவி, குழந்தையுடன் ஊருக்கு வருவதாகவும் கண்ணன் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர், மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் குழந்தையுடன் ஊருக்கு புறப்பட்டுள்ளார். வழியில் மனைவியுடன் அவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்றும், கண்ணன் கடன் பிரச்சினை காரணமாக இந்த துயர முடிவு எடுத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகின்றனர். மோட்டார் சைக்கிளில் குழந்தையின் காலணி இருந்ததால் கண்ணன் குழந்தையை கொன்று ஏரியில் வீசி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து குழந்தை கபிலனை போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் நேற்று இரவு 8 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை. குழந்தையின் கதி என்ன? என்று தெரியவில்லை. குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story