பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த சங்க பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். பச்சியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பால் உற்பத்தியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் ஒருநாளில் 1 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கூட்டுறவு பால் கொள்முதல் நிலையங்கள் மூலமாக பெறப்படுகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் பால்கொள்முதல் செய்யும் பட்டியல் விவரம் மற்றும் பிடித்தம் செய்யப்படும் பணம் தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும்.
எடைக்கருவி, பால் பரிசோதனை கருவி, கணினி ஆகியவற்றை இணைத்து அளவீடு செய்ய வேண்டும். பாலை லிட்டர் மூலமாக அளவீடு செய்யும் முறையை நடைமுறைப்படுத்தவேண்டும்.
கொள்முதலின்போது பாலில் தண்ணீரை கலத்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கண்டறிய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story