யானைகள் நடமாட்டம் இருப்பதாக தகவல்: கர்ப்பிணியை பத்திரமாக கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அழகான ஆண் குழந்தை பிறந்தது
யானைகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததும் கர்ப்பிணியை பத்திரமாக கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை கிராம மக்கள் பாராட்டினார்கள். அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கொடகரை. இந்த ஊரைச் சேர்ந்தவர் மாதம்மா (வயது 25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு ரத்த போக்கு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டாக்டர் அசோக்குமார் மற்றும் செவிலியர் ரஞ்சிதம் ஆகியோர் அங்கு சென்றனர்.
பிறகு அவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து டிரைவர் சிவக்குமார், உதவியாளர் வடிவேலு ஆகியோர் ஆம்புலன்சில் அங்கு சென்றனர். அவர்கள் மாதம்மாவை ஏற்றிக் கொண்டு உனிசெட்டிக்கு திரும்ப வந்து கொண்டிருந்தனர். அப்போது கொடகரையில் இருந்து உனிசெட்டி வரும் வழியில் யானைகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து டிரைவர் சிவக்குமார் ஆம்புலன்ஸ் வாகனத்தின் முகப்பு விளக்குகளை அணைத்தபடி ஆம்புலன்சு வாகனத்தை மெதுவாக இயக்கி உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தார். மாதம்மாவின் உடல் நிலை மோசமானதால் அவரை உடனடியாக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ததில் மாதம்மாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. யானைகள் நடமாட்டம் உள்ள மலை கிராமத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை பத்திரமாக கொண்டு வந்து அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை பெற உதவியாக இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் மற்றும் மருத்துவ குழுவினரை கிராம மக்கள் பாராட்டினார்கள்.
Related Tags :
Next Story