பணம், நில ஆவணங்களை மோசடி செய்ததாக கூறி பனியன் நிறுவனம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்


பணம், நில ஆவணங்களை மோசடி செய்ததாக கூறி பனியன் நிறுவனம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்
x
தினத்தந்தி 30 Jun 2019 4:00 AM IST (Updated: 30 Jun 2019 12:03 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பணம், நில ஆவணங்களை மோசடி செய்ததாக கூறி பனியன் நிறுவனம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் கொங்குமெயின் ரோடு ரங்கநாதபுரம் 3-வது வீதியில் பனியன் ஜாப் ஒர்க் நிறுவனம் நடத்தி வருபவர் நடராஜ்(வயது 53). இந்த நிலையில் நேற்று காலை நடராஜின் நிறுவனத்தின் முன்பு பெண் ஒருவர் மண்எண்ணெய் கேனுடன் வந்துள்ளார். பின்னர் திடீரென கூச்சலிட்டபடியே அவர் மண்எண்ணெயை தலையில் ஊற்றி விட்டு, தீவைத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து உடனடியாக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்தனர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றிய போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், காங்கேயம் ரோடு காங்கேயம் பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த ஜானகி(வயது 60) என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தொழில் அதிபர் நடராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனது மகன் பிரவீன் குமாருக்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும் அல்லது தொழிலில் பங்குதாரராக இணைத்து கொள்ளலாம் என்று கூறி குறிப்பிட்ட தொகையை கேட்டார். இதை நம்பிய நான் அவரிடம் ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலத்திற்கான ஆவணங்களையும், சுமார் ரூ.12 லட்சமும் கொடுத்தேன். ஆனால் இதுவரை நான் கொடுத்த பணத்தையோ, எனது நில ஆவணங்களையோ திருப்பி தராமல் மோசடி செய்து விட்டார். பல முறை அவரிடம் இது குறித்து கேட்டும் எந்த பதிலும் அவர் கூறவில்லை.

இந்த நிலையில் எனது ஆவணங்களை வைத்து வேறு ஒரு நபரிடம் நடராஜ் கடன் பெற்றுள்ளது தெரியவந்தது. ஆவணங்கள் திரும்ப கிடைக்காத விரக்தியில் எனது மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இருப்பினும் நடராஜ் எனது ஆவணங்களையோ, நான் கொடுத்த பணத்தையோ திரும்ப தரவில்லை. ஆதரவற்ற நிலையில் இருக்கும் நான் தற்போது வீட்டு வேலைகளை செய்து பிழைத்து வருகிறேன். இதனால் உடனடியாக எனது ஆவணங்களையும், பணத்தையும் மீட்டுத்தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் தன்னிடம் கொடுக்கப்பட்ட ஆவணங்களையும், பணத்தையும் திரும்ப ஒப்படைத்து விட்டதாகவும், இருப்பினும் ஜானகி தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருவதாகவும் நடராஜ் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story