எடப்பாடி அருகே தண்ணீர் தேடி வந்த மான் குழியில் தவறிவிழுந்து சாவு
எடப்பாடி அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த கட மான் கழிவறைக்கு தோண்டிய குழியில் தவறிவிழுந்து இறந்தது.
எடப்பாடி,
எடப்பாடியை அடுத்த ஆலச்சம்பாளையம் பேரா கவுண்டன் வளவு பகுதியில் வசித்து வருபவர் ஆறுக்குட்டி. இவருடைய மகன் அம்மாசி. இவரது வீட்டின் அருகே கழிவறை கட்ட குழிதோண்டி வைத்துள்ளார்.
நேற்று காலை மேட்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சூரியன் மலை பகுதியில் இருந்து தண்ணீர் தேடி கடமான் ஒன்று வழிதவறி பேராகவுண்டன் வளவு பகுதிக்கு வந்தது. இதை பார்த்த நாய்கள் துரத்தி கடித்ததில் அந்த மான் அங்கிருந்து தப்பி ஓடியது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மான், அம்மாசி கழிவறை கட்டுவதற்காக தோண்டியிருந்த குழியில் தவறி விழுந்தது.
இதனை பார்த்த அவர் குழியை சிமெண்டு அட்டையால் மூடிவிட்டு எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடமானை கயிறு கட்டி மீட்டனர். அதே நேரத்தில் தகவல் அறிந்து அங்கு வந்த மேட்டூர் வனக்காவலர் தங்கவேலு, வனக்காப்பாளர் மாணிக்கத்திடம் அந்த கடமான் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் அந்த மானை வனத்துறையினர் வெள்ளரிவெள்ளி கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அதிர்ச்சியில் அந்த மான் இறந்துபோனது அங்கு தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர் கார்த்தி, மானின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் வனத்துறையினர் மானின் உடலை அடக்கம் செய்தனர்.
Related Tags :
Next Story