மலைவாழ் மக்கள் அனுமதியின்றி வைத்திருக்கும் நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை


மலைவாழ் மக்கள் அனுமதியின்றி வைத்திருக்கும் நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Jun 2019 3:30 AM IST (Updated: 30 Jun 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலை மலைவாழ் மக்கள் அனுமதியின்றி வைத்திருக்கும் நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலை வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 3 பேரை நேற்று முன்தினம் கச்சிராயப்பாளையம் போலீசார் கைது செய்தனர். இதுபற்றி அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கச்சிராயப்பாளையத்துக்கு வந்து, பிடிபட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், கல்வராயன்மலை வனப்பகுதியில் வசிக்கும் பலர் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இதில் ஒருசிலர் வனவிலங்குகளை வேட்டையாடுகின்றனர். அந்த வகையில் இதுவரை 800-க்கும் மேற்பட்ட நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எனவே யாரேனும் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்தால், உடனடியாக அதனை கிராம நிர்வாக அலுவலரிடமோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திலோ ஒப்படைத்து விட வேண்டும். இல்லையெனில் நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும். அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த காரணத்தால் சின்னசேலம் அருகே நைனார்பாளையத்தை சேர்ந்த ஒருவர் மீது ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. எனவே மலைவாழ் மக்கள் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்தால் உடனே அதனை ஒப்படைத்துவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story