மாவட்டத்தில் 59,917 மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்
மாவட்டத்தில் 59 ஆயிரத்து 917 மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் மடிக்கணினி வழங்கினார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019-20-ம் கல்வி ஆண்டில் பயிலும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் மற்றும் 2018-2019-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள் என மொத்தம் 59 ஆயிரத்து 917 பேருக்கு மடிக்கணினி வழங்கும் விழா கடலூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு 59 ஆயிரத்து 917 மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மனதில் உதித்த உன்னத திட்டம் தான் இந்த விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம். ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் முன்னேற இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. ஆட்டோ மொபைல் தொழிலில் உலக அளவில் 10 இடங்களுக்குள் உள்ளது. ஒரு நிமிடத்துக்கு 3 கார்களை தமிழகம் உற்பத்தி செய்கிறது. ஆண்டுக்கு 16 லட்சம் கார்களை உற்பத்தி செய்கிறோம். இதற்கெல்லாம் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான் காரணம். தொழில் வளர்ச்சியில் முதலிடம் பெற புதிய தொழில் கொள்கையை வகுத்து செயல்படுத்த இருக்கிறோம்.
கடலூர் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும். 10 முதல் 20 தர வரிசை பட்டியலில் நாம் இடம் பெற மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்களும் மாணவர்களுக்கு போதிக்க வேண்டும்.
2020-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இருக்கிறோம். மாவட்டம் வளர்ச்சி அடைந்தால் தான் மாநிலம் வளரும் என்ற நோக்கில், அரசு மாவட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 469 பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ.229 கோடியே 98 லட்சம் வழங்கி உள்ளது. இந்த மடிக்கணினிகளை வெளியில் யாருக்கும் கொடுக்கக்கூடாது. இதை நீங்களே பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.
விழாவில் கடலூர் சப்-கலெக்டர் சரயூ, முன்னாள் நகரசபை தலைவர் குமரன், முன்னாள் நகரசபை துணை தலைவர் சேவல்குமார், அ.தி.மு.க. நகர துணை செயலாளர் கந்தன், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, விவசாயி அணி காசிநாதன், மாவட்ட பிரதிநிதி வெங்கட்ராமன், முன்னாள் கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வன், ஆர்.வி.மணி, எம்.ஜி.ஆர். மற்றும் அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் பள்ளி முதல்வர் அருள்நாதன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story