உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் சாலை மறியல் நெய்வேலி அருகே பரபரப்பு
நெய்வேலி அருகே மின்கம்பத்தில் பழுதை சரி செய்த தொழிலாளி திடீரென உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நெய்வேலி,
நெய்வேலி அருகே உள்ள நண்டுக்குழி தெற்கு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 36), கூலி தொழிலாளி. கடந்த மாதம் இவரை இந்திரா நகரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் 2 பேர் வட்டம் 4-ல் உள்ள தென்னை நாற்றங்கால் பண்ணையில் வேலை இருப்பதாக கூறி அழைத்து சென்றனர். அப்போது அங்குள்ள மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை மேலே ஏறி சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மின்கம்பத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது.
இதில் காயமடைந்த அவரை அங்கிருந்த மின்வாரிய ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக மந்தாரக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர், வீடு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்ட்ட வேல்முருகன் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவர் இறந்தது இயற்கை மரணம் என்று கூறி, வேல்முருகனின் உடலை போலீசார் பிரேத பரிசோதனை செய்யாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி அறிந்த வேல் முருகனின் உறவினர்கள், அவரது சாவுக்கு மின்வாரிய அதிகாரிகள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும், மேலும் அவரது குடு்ம்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி, இந்திரா நகரில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பு வேல்முருகனின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட வந்தனர்.
அப்போது அங்கு மின் ஊழியர்கள் யாரும் இல்லாததால், வேல்முருகனின் உடலுடன் சென்னை-கும்பகோணம் சாலையில் இந்திரா நகர் அருகே மறியலில் ஈடுபட்டனர்.
இதில் பா.ம.க மாவட்ட செயலாளர் ஆறுமுகம், அமைப்பு செயலாளர் கயல்ராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன், மாவட்ட துணை செயலாளர் சண்முகவேலு மற்றும் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் வேல்முருகன் மின்சாரம் தாக்கி இறந்ததாகவும், இறந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், உரிய பாதுகாப்பு இல்லாமல் அழைத்து சென்று விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற வேல்முருகனின் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து வேல்முருகனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story