குடிமராமத்து பணியில் ஒப்பந்தகாரர்களை அனுமதிக்கக்கூடாது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்


குடிமராமத்து பணியில் ஒப்பந்தகாரர்களை அனுமதிக்கக்கூடாது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Jun 2019 4:15 AM IST (Updated: 30 Jun 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

குடிமராமத்து பணியில் ஒப்பந்தகாரர்களை அனுமதிக்கக்கூடாது என்று சிவகங்கையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சிவகங்கை,

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன், இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மத்திய கூட்டுறவு வங்களின் மேலாண்மை இயக்குனர் பழனீஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சர்மிளா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள், விவசாயிகள் சார்பில் சேங்கைமாறன், சந்திரன், வீரபாண்டியன், ஆதிமூலம், கன்னியப்பன், வக்கீல் ராஜா, பரத்ராஜா, அய்யாச்சாமி உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. ஆற்றில் ஊற்று தோண்டி எடுக்க வேண்டிய நிலை ஏராளமான கிராமங்களில் உள்ளது. அதப்படக்கி, சிரமம், செம்பனூர், மறவமங்கலம், முடிக்கரை உள்பட மாவட்டம் முழுவதும் ஏராளமான ஊராட்சிகளில் குடிநீர் கிடைக்கவில்லை. சிவகங்கை நகரில் ரூ.10, ரூ.15-க்கு ஒரு குடம் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. எனவே தண்ணீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முறைகேடு

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் நீர் வீணாகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற வேண்டிய கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. திருப்புவனம் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர்திட்டத்தில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்கல் திட்டத்தில் விவசாய மின் இணைப்பு கேட்டு பணம் கட்டிய விவசாயிகள் வருடக்கணக்கில் காத்து கிடக்கின்றனர். அவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.

அரசு இ-சேவை மையங்கள் முழுமையாக செயல்படவில்லை. அதே சமயத்தில் தனியார் மையங்கள் நன்கு செயல்படுகின்றன. எனவே அரசு இ-சேவை மையத்தை நல்லமுறையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்குழாய் போடப்பட்டதில் குறைவான ஆழம் மட்டுமே போடப்பட்டு முறைகேடு நடந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. இந்தநிலையில் புதிதாக ஆழ்குழாய் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதிய ஆழ் குழாய்கள் போடப்படும் போது முறைகேடில்லாமல் போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு விதிமுறைப்படி

2017-ம் ஆண்டிற்கான இழப்பீட்டுத் தொகை ஏராளமான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. காளையார்கோவில், மானாமதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் ஸ்டேட் வங்கியில் பதிவு செய்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. வரத்து கால்வாய், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வன விலங்குகள் நீருக்காக ஊர்களுக்குள் வந்து உயிரிழப்பதை தடுக்க காடுகளில் குடிநீர் வசதி செய்ய வேண்டும்.

பெரியாறு கால்வாயில் ரூ.5 கோடி மதிப்பில் நடைபெற உள்ள குடிமராமத்து பணியில் ஒப்பந்தகாரர்களை ஈடுபடுத்தும் முயற்சியில் மேலூர் கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரி செயல்படுகிறார். இதை தடுக்க வேண்டும். இந்த பணியில் விவசாயிகள் சங்கம் அமைத்து முறைகேடு நடக்காமல் பணிகள் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

குடிமராமத்து பணிகள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வியின் போது அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கலெக்டர் ஜெயகாந்தன் சமாதானம் செய்ததை அடுத்து விவசாயிகள் அமைதி அடைந்தனர். பின்னர் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் கலெக்டர் ஜெயகாந்தன் கூறும்போது, பெரியாறு பாசன கால்வாய் குடிமராமத்து பணி அரசு விதிமுறைப்படி நடைபெறும். ரூ.12 கோடி செலவில் மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. கண்மாய், குளங்கள் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். அடுத்த கட்டமாக 109 கண்மாய்கள் தூர்வாரும் பணி நடக்க உள்ளது. மாவட்டத்தில் நீர் மேலாண்மை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story