த.மு.மு.க.வில் பிளவு: மாநில தலைவர், பொருளாளர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் மாநில பொதுக்குழுவில் முடிவு


த.மு.மு.க.வில் பிளவு: மாநில தலைவர், பொருளாளர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் மாநில பொதுக்குழுவில் முடிவு
x
தினத்தந்தி 30 Jun 2019 4:30 AM IST (Updated: 30 Jun 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

த.மு.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. மாநில தலைவர், பொருளாளர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது என்று திருச்சியில் நடந்த மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், அதன் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் ஒரு அணியாகவும், பொதுச்செயலாளர் ஹைதர்அலி தலைமையில் இன்னொரு அணியாகவும் பிளவுபட்டது. இந்தநிலையில் நேற்று திருச்சியில் மாநில பொதுச்செயலாளர் ஹைதர்அலி தலைமையில் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல்ரஹீம் வரவேற்று பேசினார். தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது த.மு.மு.க.வின் வரலாற்றை விளக்கி பேசினார். மாநில செயலாளர் அவுலியா, உஸ்மான்கான் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் ரஹமத்துல்லா நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில பொதுச்செயலாளர் ஹைதர்அலி கூறியதாவது:-

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்ட நோக்கம், அடிபிசகாமல் நேரடி அரசியல் கவனம் செலுத்தாமல் உரிமை மீட்பு பேரியக்கமாக தனித்துவத்துடன் தொடர்ந்து செயல்படும். இந்த அமைப்பின் நிர்வாக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் வேறு எந்த அமைப்பின் நிர்வாக செயற்குழு, பொதுக்குழுவில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாநில, மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் மீது முறையில்லாமல் எடுக்கப்பட்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் ரத்து செய்து, அவர்கள் ஏற்கனவே வகித்து வந்த பொறுப்புகளில் தொடர்ந்து செயல்படுவார்கள்.

தலைவர், பொருளாளர் மீது நடவடிக்கை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா கழகத்தின் விதிமுறைகளுக்கு மாறாக விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் பல குழப்பங்களை ஏற்படுத்தி வருவதால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. கஜா புயலில் வசூலிக்கப்பட்ட நிதிக்கான கணக்குகளை முறையாக கையாளாகாத பொருளாளர் ஷபியுல்லாகான் மீதும் ஒழுங்கு நடவடிக்கையாக நம்பிக்கை இல்லா தீர்மானம் மேற்கொள்ளவும் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில துணைத்தலைவர் ஹமீது, மாநில செயலாளர் மைதீன் சேட்கான் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட தற்காலிக நீக்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்வதுடன், இருவரையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யும் அதிகாரத்தை பொதுச்செயலாளரான எனக்கு(ஹைதர் அலி) பொதுக்குழு அனுமதி அளித்துள்ளது.

பா.ஜனதா மீது தாக்கு

முஸ்லிம் விரோத கொள்கையை மட்டுமே செயல்படுத்தி வரும் பாரதீய ஜனதா அரசு இதனை உடனடியாக நிறுத்திக்கொண்டு மக்கள் நலன் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்திட வேண்டும். சிறுபான்மை முஸ்லிம்களை துன்புறுத்துவது, கொலை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் மற்றொரு அணியாக த.மு.மு.க.வின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்ததாகவும் ஹைதர்அலி தெரிவித்தார்.

Next Story