சொந்த பணத்தை செலவு செய்யவில்லை: மக்கள் வரிப்பணத்தில் தான் பிரதமரும் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறார் ஈசுவரப்பாவுக்கு சித்தராமையா பதிலடி


சொந்த பணத்தை செலவு செய்யவில்லை: மக்கள் வரிப்பணத்தில் தான் பிரதமரும் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறார்   ஈசுவரப்பாவுக்கு சித்தராமையா பதிலடி
x
தினத்தந்தி 30 Jun 2019 4:00 AM IST (Updated: 30 Jun 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் வரிப்பணத்தில் தான் பிரதமர் மோடியும் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறார், அவரது சொந்த பணத்தை செலவு செய்யவில்லை என்று ஈசுவரப்பாவுக்கு சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.

பாகல்கோட்டை,

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு அரிசி, பால், முட்டை, ஷூ கொடுத்தேன். ஆனால் மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்காமல் பா.ஜனதாவுக்கு வாக்களிப்பது எதற்காக? என்று தெரியவில்லை என கூறி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜனதா மூத்த தலைவரான ஈசுவரப்பா கூறுகையில், “சித்தராமையா தனது சொந்த பணத்திலேயோ, அவரது அப்பா சேர்த்து வைத்த சொத்துக்களை விற்றோ பள்ளி குழந்தைகளுக்கு பால், முட்டை, ‘ஷூ‘ கொடுக்கவில்லை. மக்கள் வரிப்பணத்தில் இருந்து தான் அவற்றை எல்லாம் கொடுக்கிறார்“ என்றார்.

மேலும் ஈசுவரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில், சித்தராமையா இலவசமாக மக்களுக்கு அரிசி கொடுக்கும் முன்பாக, மக்கள் மண்ணை அள்ளி தின்று கொண்டிருந்தார்களா? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். இதுகுறித்து பாகல்கோட்டையில் சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து சித்தராமையா கூறியதாவது:-

ஈசுவரப்பாவுக்கு நாகரிகமே தெரியவில்லை. நாகரிகம் இல்லாமல் வாய்க்கு வந்ததை அவர் பேசி வருகிறார். ஈசுவரப்பா ஒரு மனிதரே இல்லை. நான் முதல்-மந்திரியாகி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். ஈசுவரப்பா துணை முதல்-மந்திரியாக இருந்த போது என்ன செய்தார்? அரசியல் நாகரிகம் தெரியாமல் பேசுகிறவர்கள் பற்றி நான் பேச விரும்பவில்லை. மக்கள் வரிப்பணத்தில் இருந்து பள்ளி குழந்தைகளுக்கு பால், முட்டை வழங்குவதாகவும், மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதாகவும் ஈசுவரப்பா சொல்லி இருக்கிறார்.

பிரதமர் மோடி மட்டும் தனது சொந்த பணத்தை செலவு செய்தா நலத்திட்டங்களை செயல்படுத்து கிறார்?. மக்கள் வரிப்பணத்தில் தான் பிரதமர் மோடியும் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறார். மாநில அரசிடம் இருந்து வரிப்பணத்தை பெற்று, அந்த பணத்தின் மூலமாக தான் கர்நாடகத்திற்கு தேவையான திட்டங்களை அறிவிக்கிறார்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story