சாலைப்பணிக்காக பயிர்கள் மீது மண் கொட்டப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி
திருப்போரூர் அருகே சாலைப்பணிக்காக பயிர்கள் மீது மண் கொட்டப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்போரூர்,
பழைய மாமல்லபுரம் சாலை எனப்படும் ராஜீவ்காந்தி சாலை சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை 6 வழிப்பாதையாக உள்ளது. சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை 4 வழிப்பாதையாக உள்ளது. இந்த சாலையில் படூர், கேளம்பாக்கம், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், நெடுஞ்சாலை துறை சார்பில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, படூர்-தையூர் இடையே ஒரு புறவழிச்சாலையும், திருப்போரூர்-ஆலத்தூர் இடையே ஒரு புறவழிச்சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 2 புறவழிச்சாலைகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.465 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பயிர்கள் மீது மண்
இதைத்தொடர்ந்து இந்த சாலைகளை அமைக்க படூர், கழிப்பட்டூர், கேளம்பாக்கம், தையூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு, திருப்போரூர், தண்டலம், ஆலத்தூர், வெங்களேரி உள்பட 13 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து முதல்கட்டமாக படூர், கேளம்பாக்கம் பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. அடுத்த கட்டமாக திருப்போரூர்-ஆலத்தூர் இடையே புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்த சாலையில் பெரும்பாலான விளைநிலங்கள் திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு சொந்தமானது.
இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். ஆனால், நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், கோவிலுக்கு சொந்தமான நிலம் என்பதால் அவற்றை பயிரிடும் விவசாயிகளை கண்டு கொள்ளாமல், பயிர்களின் மீதே மண்ணை கொட்டி சாலைப்பணியை தொடங்கி உள்ளதாக தெரிகிறது. இதனால் கஷ்டப்பட்டு வளர்த்த பயிர்கள் மீது மண்ணை கொட்டி மூடுவதை கண்டு விவசாயிகள் கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
எனவே, தற்போது நிலத்தில் வைக்கப்பட்டு உள்ள பயிர், அறுவடைக்கு செல்லும் வரை காத்திருந்து, சாலைப்பணியை தொடங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story