செங்குன்றத்தில் தோஷம் நீக்குவதாக கூறி 18 பவுன் நகை, ரூ.1 லட்சம் மோசடி பெண் கைது
செங்குன்றத்தில் தோஷம் நீக்குவதாக கூறி வீட்டின் உரிமையாளரிடம் நூதன முறையில் 18 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணத்தை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த புள்ளிலைன் புதுநகர் பாலாஜி கார்டனை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர், செங்குன்றத்தில் உள்ள நெல் மண்டியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராசாத்தி(வயது 45). இவர்களுக்கு ராஜா(26), ராஜ்குமார்(24) என 2 மகன்கள் உள்ளனர்.
இவர்களில் ராஜா, எம்.பி.ஏ. படித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். ராஜ்குமார், பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார். மூத்த மகன் ராஜாவுக்கு பெண் தேடிவந்தனர். ஆனால் சரியான வரன் அமையவில்லை என தெரிகிறது.
இந்தநிலையில் ராசாத்திக்கு சொந்தமான வீட்டில் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஏழுமலைநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கமித்ரா(35) என்ற பெண், தனது கணவர் ராஜாவுடன் கடந்த ஏப்ரல் மாதம் வாடகைக்கு குடியேறினார்.
தோஷம் நீக்குவதற்காக நகை அபகரிப்பு
வீட்டின் உரிமையாளர் ராசாத்தியிடம் சங்கமித்ரா நெருக்கிப்பழகி வந்தார். அப்போது சங்கமித்ரா, உங்கள் மகன் ராஜாவுக்கு தோஷம் உள்ளது. அதனால்தான் திருமணம் தடைபட்டு வருகிறது. இந்த தோஷத்தை நான் நீக்குகிறேன் என்றார். அதை உண்மை என்று நம்பிய ராசாத்தியும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து தோஷம் நீக்குவதற்காக கடவுளுக்கு பூஜை செய்யவேண்டும் என ராசாத்தியிடம் இருந்து ஒவ்வொரு நகைகளாக வாங்கி அவரே வைத்துக்கொண்டு, அவைகளை கடவுளுக்கு படைத்துவிட்டதாக கூறி ஏமாற்றி வந்தார்.
இவ்வாறு ராசாத்தியின் தாலி சரடு வரை வாங்கி பூஜை செய்வதாக நம்ப வைத்து 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் வரை அபகரித்து கொண்டார். இவ்வாறு அபகரித்த நகைகளை விற்று பணமாக்கி வீட்டில் ஆடம்பர பொருட் களை வாங்கி குவித்தார்.
பெண் கைது
இந்தநிலையில் நேற்று முன்தினம் ராசாத்தியிடம் அவருடைய மூத்த மகன் ராஜா, செலவுக்கு பணம் கேட்டபோது, தன்னிடம் பணம் எதுவும் இல்லை. 18 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை தோஷம் கழிப்பதற்காக சங்கமித்ராவிடம் கொடுத்து விட்டதாக கூறினார்.
அதன்பிறகுதான், தங்கள் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் சங்கமித்ரா, தனது தாயாரை ஏமாற்றி நகை, பணத்தை மோசடி செய்து இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் செங்குன்றம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழழகன் வழக்குப்பதிவு செய்து சங்கமித்ராவை கைது செய்தார். அவரிடமிருந்து 18 பவுன் நகைகளை பறிமுதல் செய்தார். ஆனால் ரூ.1 லட்சத்தை செலவு செய்துவிட்டதாக சங்கமித்ரா தெரிவித்தார். கைதான சங்கமித்ரா, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story