டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தூய்மை பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் கலெக்டர் பிரபாகர் அறிவுரை


டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தூய்மை பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் கலெக்டர் பிரபாகர் அறிவுரை
x
தினத்தந்தி 1 July 2019 4:30 AM IST (Updated: 30 Jun 2019 10:28 PM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தூய்மை பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் கூறினார்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், டெங்கு நோய் தடுப்பு மற்றும் கிராமங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்வது மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் அசோக்குமார், துணை இயக்குனர் பிரியாராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, உதவி கலெக்டர்கள் சரவணன், குமரேசன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஹரிஹரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில், அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி, ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு நோய் தடுப்பு பணிகள், தூய்மை பணிகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். கிராமப்புறங்கள் மற்றும் மலைகிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாக்கடை கால்வாய்களை தூர்வாரி கழிவுநீர் தேங்கா வண்ணம் பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். குடிநீர் தொட்டி, மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்து, தேங்காய் ஓடுகள், டயர்கள், பழைய பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற வேண்டும்.

தினந்தோறும் காலை, மாலை வேலைகளில் கொசு புகை மருந்து தெளிக்க வேண்டும். சம்பந்தபட்ட அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து சரியான அளவில் குளோரின் பவுடர் தெளிக்க வேண்டும். சுகாதாரத்துறை மற்றும் நலப்பணிகள் துறை சார்பாக தேவையான இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு மேல் மூடி அமைத்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். மேலும் சுகாதாரத்துறை சார்பில் நீர் தேங்கும் இடங்களில் கொசு மருந்து தெளித்தல், கொசு ஒழிப்பு புகை தெளிப்பான் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் காய்ச்சல் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமணைகளில் சிகிச்சை பெற வேண்டும். மேலும் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தூய்மை பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story