நாமக்கல் மண்டலத்தில் தினசரி முட்டை உற்பத்தி 7 லட்சம் உயர்வு


நாமக்கல் மண்டலத்தில் தினசரி முட்டை உற்பத்தி 7 லட்சம் உயர்வு
x
தினத்தந்தி 1 July 2019 4:00 AM IST (Updated: 30 Jun 2019 10:32 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மண்டலத்தில் தினசரி முட்டை உற்பத்தி சுமார் 7 லட்சம் வரை உயர்ந்து உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 4½ கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் கோழிப்பண்ணை தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சமீப காலமாக முட்டை உற்பத்தி சரிவடைந்த நிலையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் தினசரி முட்டை உற்பத்தி சுமார் 7 லட்சம் வரை உயர்ந்து இருப்பது பண்ணையாளர்களை மகிழ்ச்சி அடைய செய்து உள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, நாமக்கல் மண்டலத்தில் கடந்த மார்ச் மாதம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 கோடியே 32 லட்சம் முட்டைகளும், ஏப்ரல் மாதம் 3 கோடியே 36 லட்சம் முட்டைகளும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.

மே மாதம் தினசரி சராசரியாக 3 கோடியே 43 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும் போது மே மாதம் சுமார் 7 லட்சம் முட்டைகள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் என்பதால் முட்டைக்கான விலை அதிகரித்து காணப்படும். இதை கருத்தில் கொண்டு ஏப்ரல், மே மாதங்களில் முட்டையிடும் வகையில் குஞ்சுகளின் எண்ணிக்கையை பண்ணையாளர்கள் அதிகரிப்பது வழக்கம். இதுவே முட்டை உற்பத்தி அதிகரிக்க முக்கிய காரணம் என பண்ணையாளர்கள் கூறினர். இதேபோல் கடந்த மாதமும் முட்டை உற்பத்தி கணிசமான அளவு உயர்ந்து இருப்பதாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story