குமரமங்கலம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி


குமரமங்கலம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 1 July 2019 3:45 AM IST (Updated: 30 Jun 2019 10:36 PM IST)
t-max-icont-min-icon

குமரமங்கலம் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

எலச்சிபாைளயம்,

திருச்செங்கோடு அருகே குமரமங்கலம் 87 கவுண்டம்பாளையம் ஊராட்சியில் இந்திரா நகர் உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு ஆண்டு காலமாக குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இப்பகுதியில் பிரதான தொழிலாக விசைத்தறி தொழில் இருந்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள சுப்புராயநகரில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கிருந்த குடும்பங்கள் வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்து ஒழுங்குகரடு என்ற இடத்தில் இந்திரா நகர் என்ற பெயர் சூட்டப்பட்டு குடியிருப்புகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. மேலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. இப்பகுதி மக்கள் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் சென்று போக்கம்பாளையம் ஊராட்சியில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். இதனால் வெளியூர் பணிகளுக்கு செல்லக்கூடிய தொழிலாளர்கள், பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள், வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாததால் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் ரூ.450 வரை தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 87 கவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகரில் கடந்த ஒரு ஆண்டு காலமாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் இப்பகுதிக்கு குடிநீர் வழங்கவும், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

Next Story