பாளையங்கோட்டையில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் நகை பறிப்பு
பாளையங்கோட்டையில் ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் நகை பறித்த மர்ம நபர் மற்றொரு வீடுபுகுந்து பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை திருடிக் கொண்டு தப்பி சென்று விட்டான்.
நெல்லை,
பாளையங்கோட்டை திம்மராஜபுரம் ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் கந்தன் (வயது 65). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவருடைய மனைவி பார்வதி (60). இவர்கள் 2 பேரும் வீட்டின் முன்பக்க அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டுக்குள் மர்ம நபர் புகுந்துள்ளான். அவன் முன்பக்க கதவை நைசாக திறந்து உள்ளே சென்றான்.
அங்கு பார்வதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பார்வதி கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்டு கந்தன் எழுந்து கொள்ளையனை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவன் வேகமாக தப்பி ஓடினான்.
இதுகுறித்து கந்தன் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப் போது மர்ம நபர் டவுசர் மட்டுமே அணிந்திருந்தான். அவனுக்கு 30 வயதுக்குள் இருக்கும் என்பதும் தெரியவந்தது.
இதுபற்றி பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இதே போல் பாளையங்கோட்டை அருகே உள்ள கொங்கந்தான்பாறை தாமரை செல்வி கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன். இவருடைய மனைவி இசக்கியம்மாள் (35).
சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் இசக்கியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டான். இந்த வீட்டிலும் டவுசர் மர்ம நபர் கைவரிசை காட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story