பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.) மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எந்தவித நிபந்தனையின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்ப படிவங்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கிக்கணக்கு எண் விவரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டும்.
வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதியில் தொடங்கும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அக்டோபர் மாதம் 25-ந் தேதிக்கு முன்பும், புதியதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் மாதம் 30-ந் தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகவும். அரசு இணையதளம் www.tn.gov.in/bcmbcdept -யிலும் இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது. மேலும் இக்கல்வி உதவித் தொகை திட்டத்தில் மாணவ, மாணவிகள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story