பாரம்பரிய விதைத்திருவிழா விவசாயிகள், பொதுமக்கள் பார்வையிட்டு ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்


பாரம்பரிய விதைத்திருவிழா விவசாயிகள், பொதுமக்கள் பார்வையிட்டு ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்
x
தினத்தந்தி 1 July 2019 4:15 AM IST (Updated: 1 July 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் பாரம்பரிய விதைத்திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய மரபு நெல் விதைகள் உள்ளிடவற்றை விவசாயிகள், பொதுமக்கள் பார்வையிட்டு, அதனை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

பெரம்பலூர்,

அடுத்த தலைமுறைக்கு நஞ்சில்லா உணவுகளை தர வேண்டும் என்பதற்காக பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழு சார்பில் 4-ம் ஆண்டு பாரம்பரிய விதைத்திருவிழா பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள பழைய எல்.ஐ.சி. வளாகத்தில் நேற்று காலை தொடங்கியது. விதைத்திருவிழாவில் விவசாயிகள், பொதுமக்களின் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் பாரம்பரிய ஆற்காடு கிச்சலி சம்பா, இலுப்பைப்பூ சம்பா, அறுபதாம் குறுவை, கருடன் சம்பா, பூங்கார், கள்ளி மடையான், மாப்பிள்ளை உள்ளிட்ட பல்வேறு மரபு நெல் விதைகளும், நாட்டு பருத்தி விதைகள், அகத்திக்கீரை, வெந்தய கீரை உள்ளிட்ட பல்வேறு வகைளின் கீரைகளின் விதைகள், பீர்க்கன், புடலை, பூசணி, கொடி அவரை உள்ளிட்ட கொடி வகை காய்கறிகளின் விதைகள், கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை உள்ளிட்ட செடி வகை விதைகளான நாட்டு காய்கறிகளின் விதைகளும், கம்பு, கேழ்வரகு, சோளம், குதிரைவாலி, பனிவரகு, தினை, வரகு, சாமை, கருப்பு கொள்ளு, சிவப்பு கொள்ளு ஆகிய விதைகளும் வைக்கப்பட்டிருந்தன.

விதைகளை ஆர்வத்துடன்...

இதனை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும், வெளியூரை சேர்ந்தவர்களும் வந்து ஆர்வத்துடன் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு தேவையான விதைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர். முன்னதாக விதைத்திருவிழா சிலம்பாட்டம், பறையிசையுடன் தொடங்கியது. அப்போது அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த இயற்கை வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வாரின் உருவ படத்திற்கு சிறப்பு விருந்தினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பெரம்பலூர் மாவட்ட புழுதிக்கார், கள்ளிமடையான் நெல் ரகத்தை, ஜெயராமன், செல்வகுமார் ஆகியோர் வழங்க கலியபெருமாள் என்பவர் பெற்று கொண்டார். தொடர்ந்து நீர் நிலைகளின் கட்டமைப்பு, உடலே மருத்துவர், சிறுதானியங்கள் சாகுபடி, ஒருங்கிணைந்த பண்ணையம் எவ்வாறு அமைப்பது, கால்நடைகள் வளர்ப்பில் நோய்களில் இருந்து பாதுகாப்பது எப்படி?, கீரை வளர்ப்பு-விற்பனை, ராசாயன பயன்பாட்டால் மக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் என்கிற பல்வேறு தலைப்புகளில் வேளாண்மை வல்லுநர்கள் கருத்துரையாற்றினர். விதைத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். காலையில் தொடங்கிய விதைத்திருவிழா மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. 

Next Story