பாரம்பரிய கலைகளை ஆர்வமுடன் கற்கும் பள்ளி மாணவர்கள்
திண்டுக்கல்லில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெறும் பயிற்சியில் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பாரம்பரிய கலைகளை கற்கின்றனர்.
திண்டுக்கல்,
மேற்கத்திய நாகரிக மோகத்தில் இருந்து மெல்லமெல்ல விலகி, தமிழர்களின் பாரம்பரிய கலைகள் மீதான ஆர்வம் பலருக்கும் அதிகரித்து வருகிறது. இதனால் பாரம்பரிய கலை பயிற்சியில், பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை சேர்த்து வருகின்றனர்.
இதுபோன்ற பாரம்பரிய கலைகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்காகவே, மாவட்டந்தோறும் அரசின் கலை பண்பாட்டுத்துறையின் ஜவகர் சிறுவர் மன்றம் செயல்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல்லில், முதன்மை கல்வி அலுவலகம் அருகேயுள்ள காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலை பண்பாட்டுத்துறையின் ஜவகர் சிறுவர் மன்றம் செயல்படுகிறது.
இங்கு பரதநாட்டியம் மற்றும் கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கிராமிய நடனங்கள், குரலிசை, இசை கருவிகளை இசைத்தல், ஓவியம், கைவினை பொருட்கள் தயாரி்த்தல், சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளும் கற்பிக்கப்படுகின்றன. இந்த கலை பயிற்சியில் 5 முதல் 16 வயது வரையுள்ள அனைவரும் சேரலாம்.
ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 12 மணி வரை பயிற்சி வகுப்பு நடக்கிறது. இந்த பயிற்சி முழுவதும் இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும் பயிற்சிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் அங்கேயே வழங்கப்படுகின்றன.
இதனால் திண்டுக்கல் நகர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் வந்து பயிற்சியில் சேர்ந்துள்ளனர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி தனியார் பள்ளி மாணவர்களும் சேருவது குறிப்பிடத்தக்கது.
இதில் தற்காப்பு கலைகளில் 38 பேரும், நடன கலைகளில் 30 பேரும் உள்பட 112 பேர் பயிற்சியில் சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆர்வமுடன் கலைகளை கற்று வருகின்றனர். இந்த பயிற்சியில் சேருவதற்கு கடைசி தேதி எதுவும் இல்லை என்பதால் மேலும் பல மாணவர்கள் சேருவார்கள் என்று திட்ட அலுவலர் ரமணி கூறினார்.
இங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து கலை பண்பாட்டுத்துறை ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் ரமணி கூறுகையில், நடனம், தற்காப்பு கலை, இசை, ஓவியம் உள்பட அனைத்து கலைகளுக்கும் சிறந்த பயிற்்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே, 5 முதல் 16 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் எப்போதும் வந்து பயிற்சியில் சேரலாம். இதுதவிர கோடைகாலம், பள்ளி விடுமுறை காலத்திலும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மே மாதம் பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். அதோடு சிறப்பாக பயிற்சி பெறும் குழந்தைகளை கலை வளர்மணி, கலை சுடர்மணி உள்ளிட்ட விருதுகளுக்கும் பரிந்துரை செய்வோம். தமிழர் பாரம்பரிய கலைகள் மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். இதன்மூலம் நமது கலைகளை அழியாமல் பாதுகாக்க முடியும், என்றார்.
Related Tags :
Next Story