மேட்டுப்பாளையம் கவுரவக்கொலையில் - மேலும் 3 வாலிபர்கள் கைது
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கவுரவக்கொலை தொடர்பாக மேலும் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன்கள் கனகராஜ், வினோத்குமார், கார்த்திக். இவர்கள் 3 பேரும் மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மண்டியில் சுமை தூக்கும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கனகராஜ் அதே பகுதியை சேர்ந்த அமுதா என்பவரின் மகள் வர்ஷினி பிரியாவை காதலித்து வந்துள்ளார். அவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
எனவே அவர்களின் காதலுக்கு கனகராஜின் சகோதரர் வினோத்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் காதல்ஜோடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறினர். அப்போது அவர்களை கண்டுபிடித்து பிரித்து விட்டனர். இதையடுத்து வர்ஷினி பிரியா அவருடைய பாட்டி வீட்டிற்கு பெற்றோரால் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனாலும் அவர்கள் 2 பேரும் தொடர்ந்து காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்ய முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கனகராஜின் தந்தையிடம் சென்றது அவர், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி ஸ்ரீரங்கராயன் ஓடை அருகே எம்.ஆர்.டி.நகர் பகுதியில் ஒரு வீட்டில் தங்க வைத்தார் இதை அறிந்த வினோத்குமார், கனகராஜ் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று தகராறு செய்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த வினோத்குமார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கனகராஜை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அலறியபடி கீழே சரிந்தார். அவரின்அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த வர்ஷினிபிரியாவையும் வினோத்குமார் அரிவாளால் வெட்டினார். இதில், கனகராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். வர்ஷினிபிரியா சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில் கவுரவக்கொலை செய்த வினோத்குமார் மீது வழக்கு பதிவு செய்து மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வர்ஷினி பிரியா சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் பரிதாபமாக இறந்தார். ஆனால் அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள், வர்ஷினிபிரியாவின் கொலையில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து கவுரவக்கொலை செய்ய தூண்டியதாக வினோத் குமாரின் நண்பர்களான ராம்குஞ்சு மகன் சின்னராஜ் (27), செல்வம் மகன் கந்தவேல் (23) ராம் மகன் ஐயப்பன் (24) ஆகிய 3 பேரை போலீசார் தேடி வந்தனர். பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு மணி தலைமையில் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் திலக், ராஜேந்திர பிரசாத், சிவசாமி, நெல்சன் ஆகியோர் மோத்தேபாளையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்ற 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் 3 பேரும் கவுரவக்கொலை செய்ய வினோத்குமாரை தூண்டியது தெரிய வந்தது. இதையடுத்து வினோத் குமாரின் நண்பர்கள் சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோவை முதன்மை மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story