கொடைரோடு அருகே, காணாமல் போன தொழிலாளி கிணற்றில் பிணமாக மீட்பு - கொலையா? போலீசார் விசாரணை
கொடைரோடு அருகே காணாமல் போன தொழிலாளி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைரோடு,
கொடைரோடு அருகேயுள்ள நாகையகவுண்டன்பட்டி கிராமத்தை அடுத்து ஒரு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக அம்மையநாயக்கனூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் கிணற்றில் பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் இறந்து பல நாட்கள் இருக்கும் என்பதால் உடல் சிதைந்த நிலையில் இருந்தது. இதற்கிடையே நாகையகவுண்டன்பட்டியை சேர்ந்த தொழிலாளி வெள்ளைத்துரை (வயது 38) என்பவர் கடந்த ஒரு மாதங்களுக்கு வீட்டில் இருந்து காணாமல் போனார்.
இதனால் இறந்து கிடந்தவர் வெள்ளத்துரையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தினர். இதையடுத்து வெள்ளத்துரையின் தாயார் தங்கம்மாளை சம்பவ இடத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது இறந்து கிடந்தவர் அணிந்திருந்த ஆடையை வைத்து தனது மகன் வெள்ளத்துரை தான் என்பதை தங்கம்மாள் உறுதி செய்தார்.
இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அவரை அழைத்து சென்று கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story