மதுரை தொழிலதிபர் வீட்டில் கொள்ளைபோன 50 பவுன் நகைகள், ரூ.30 லட்சம் மீட்பு - முக்கிய குற்றவாளியும் சிக்கினார்
தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 50 பவுன் நகைகள், ரூ.30 லட்சத்தை போலீசார் மீட்டுள்ளனர்.
மதுரை,
மதுரை மேல அனுப்பானடி கண்மாய்கரை சண்முகாநகர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். தொழில் அதிபர். இவருடைய வீட்டுக்கு கடந்த 27-ந்தேதி 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் வீட்டில் இருந்த வெற்றிவேல், அவரது மனைவி கிரகலட்சுமி, மருமகள் சதிகா ஆகியோர் மீது மிளகாய் பொடியை தூவி, அவர்களை கட்டிப்போட்டனர். பின்னர் வீட்டில் இருந்த 50 பவுன் தங்க நகைகள், ரூ.38 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். கொள்ளையர்கள் கொடைக்கானலில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று, ஒரு ஓட்டலில் தங்கியிருந்த முனீஸ், தினேஷ்குமார், ஜஸ்டின் நிர்மல் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் முக்கிய குற்றவாளியான வீரகுமாரையும் நேற்று மதுரையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் பற்றி போலீசார் தெரிவித்ததாவது:-
வெற்றிவேல் மதுரையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் நிர்வாகியாக உள்ளார். அதே நிறுவனத்தில் உடற்கல்வி ஆசிரியராக வீரகுமார் பணியாற்றி உள்ளார். அந்த சமயத்தில் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் வீரகுமார் அறிமுகமாகி, குடும்ப நண்பர் போல பழகுவதை வழக்கமாக கொண்டுள்ளார். நாளடைவில் பெற்றோர்களிடம் கடன் வாங்கி, அதை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதுபற்றி அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வீரகுமாரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் பழிவாங்கும் நோக்கத்தில் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி தான் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெற்றிவேல் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை கட்டிப்போட்டு பணம், நகைகளை கொள்ளையடித்துள்ளார். தற்போது 50 பவுன் நகைகள், ரூ.30 லட்சத்தை அவர்களிடம் இருந்து மீட்டு உள்ளோம். மேலும் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story