கண்மாய் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
கண்மாய் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினை கடுமையாகி உள்ள நிலையில் நிலத்தடி நீர் ஆதாரங்களை பெருக்கும் வகையில் கண்மாய்களில் நீரை தேக்கி வைக்க அவற்றை மராமத்து செய்ய வேண்டும் என பரவலாக கோரப்பட்டு வந்தது. கடந்த காலங்களில் ஐரோப்பிய நிதி உதவியுடன் கண்மாய்கள் சீரமைக்கப்பட்டு வந்தன.
தற்போது ஒவ்வொரு நிதியாண்டும் அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியில் குறைந்த அளவு கண்மாய்களே சீரமைக்க வாய்ப்பு உள்ள நிலையில் அவையும் முறையாக செய்யப்படுவதில்லை. இந்தநிலையில் தற்போது தமிழக அரசு, மாநிலம் முழுவதும் குடிமராமத்து முறையில் கண்மாய்களை சீரமைக்க பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் அனுமதி வழங்குமாறும் அதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், விருதுநகரில் குடிநீர் பிரச்சினை தொடர்பான ஆய்வு கூட்டத்தினை மேற்கொள்ள மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கிருஷ்ணன், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களை மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.
ஆனாலும் எந்ததெந்த கண்மாய்கள் முன்னுரிமை அடிப்படையில் மராமத்து செய்யப்பட வேண்டும் என்ற விவரம் இறுதி செய்யப்பட வில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் விருதுநகர் மாவட்டத்தில் குடிமராமத்து முறையில் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக அரசு மாநிலம் முழுவதும் 1,829 குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை மூலம் 65 சதவீத பணிகளை மேற்கொள்ள ரூ.26 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கண்மாய் கரைகளை பலப்படுத்துதல், வரத்து கால்வாய்களை தூர்வாருதல், பழுதடைந்த கட்டுமானங்களை புதுப்பித்தல், அடைப்பு பலகைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் குடிமராமத்து பணிகளாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை 50 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு செயல்படும் பாசனதாரர்கள் சங்கங்கள் மூலம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதம் அரசு நிதியாகவும், 10 சதவீதம் விவசாயிகள் பங்களிப்பாகவும் இருக்கும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாசனதாரர்கள் சங்கங்கள், குடிமராமத்து திட்டம் குறித்த விவரங்களை நீர்வள ஆதாரத்துறையில் இருந்து பெற்று கொள்ளலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கிராம பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்தி அவர்களை இந்த திட்டத்தில் பங்கேற்க மற்றும் ஊக்குவிக்க தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் பாசனதாரர் சங்கங்கள் அல்லாதோர் குடிமராமத்து முறையில் மராமத்து பணிகளை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளனர். விருதுநகர் அருகே வில்லிபத்திரி கிராமத்தில் உள்ள கண்மாயை அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும், விருதுநகர் ரோட்டரி சங்கத்தினரும் மராமத்து செய்துள்ளனர்.
எனவே கண்மாய்களை மராமத்து செய்ய முன்வரும் கிராமத்து இளைஞர்கள், சேவை சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோரையும் உரிய முறையில் பயன்படுத்தி கூடுதல் கண்மாய்களை மராமத்து செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அத்தியாவசிய தேவையாகும்.
Related Tags :
Next Story