சாமி தரிசனம் செய்ய சதுரகிரி கோவிலுக்கு வந்த பக்தர் திடீர் சாவு
சதுரகிரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் பரிதாபமாக இறந்தார்.
வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சுந்தரமகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்குள் அமைந்து இருப்பதால் வனத்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
வனத்துறை சார்பில் மாதம் நான்கு நாள் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு 3 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த கோவிந்தராஜ்(வயது 44) என்பவரும் நேற்று காலை 6 மணி அளவில் சாமி தரிசனம் செய்ய சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அவர் யானைக்கல் அருகே சென்று கொண்டிருக்கும்போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடல் டோலி மூலம் கோவில் அடிவாரப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டுசெல்லப்பட்டது.
இச்சம்பவம் குறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story