குளத்துப்பட்டி கோவில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு
குளத்துப்பட்டியில் கோவில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ளது குளத்துபட்டி கிராமம். இந்த ஊரில் உள்ள மந்தை அம்மன், பிடாரி அம்மன், எரளி கருப்பர், காளி அம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். ஆனால் பல்வேறு காரணங்களால் 3 தலைமுறைகளாக மஞ்சுவிரட்டு நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கோவில் திருவிழாவில் நீண்ட இடைவெளிக்கு பின்பு முதல் மஞ்சு விரட்டு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி 2-ம் ஆண்டு மஞ்சுவிரட்டு குளத்துபட்டி பெரியகண்மாயில் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
முன்னதாக கோவில் காளைக்கு மரியாதை செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டது. பின்பு கண்மாயில் உள்ள தொழுவத்தில் இருந்து கோவில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து மற்ற காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட் டன. இதில் சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, மாவட்ட காளைகள், மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். அனைத்து காளைகளுக்கும் வேட்டி, துண்டுகள் உள்பட பல்வேறு பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.
இந்தநிலையில் அனுதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக குளத்துப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் உலகம்பட்டி போலீசார், அரியாண்டிபட்டி வெள்ளைச்சாமி, குளத்துப்பட்டி கருப்பையா, துரை, சின்னையா, விஜயபுரம் ஆறுமுகம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story